வங்கதேச மாணவர் போராட்டம் பற்றி அவதூறு பரப்புவதாக எதிர்ப்பு | Amir Khasru Mahmud Chowdhury
வங்கதேச மாணவர் போராட்டம் பற்றி அவதூறு பரப்புவதாக எதிர்ப்பு | Amir Khasru Mahmud Chowdhury | BNP party leader | Bangladesh | நமது பக்கத்து நாடான வங்கதேசத்தில் 2009 முதல் அவாமி லீக் கட்சி ஆட்சியில் இருந்தது. அக்கட்சி தலைவரான ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார். கடந்த 5ம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, வங்க தேசத்தில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்கு முக்கிய காரணமே வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் தான். சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாகி ஷேக் ஹசீனாவுக்கு எதிராக திரும்பியது. இப்போது வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றுள்ளது. இடைக்கால அரசின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனிஸ் செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே ஷேக் ஹசீனாவை இந்தியா உடனடியாக வெளியேற்ற வேண்டும்; மீண்டும் வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அடுத்தடுத்து கோரிக்கைகள் வருகின்றன. இந்நிலையில் இதே கருத்தை எதிர்கட்சியான முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் தொழில்துறை அமைச்சருமான அமீர் கஸ்ரு மஹ்மூத் சவுத்ரி வலியுறுத்தி உள்ளார். இந்தியாவும், வங்கதேசமும் சிறந்த அண்டை நாடுகளாக இருக்க வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம். எங்கள் கட்சியும் இந்தியாவுடன் நட்புறவை தான் விரும்புகிறது. இந்தியா - வங்கதேசத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இரு நாடுகளும் நட்பு கொள்ளாமல் இருக்க முடியாது. பரஸ்பர மரியாதை, இருதரப்பு இடையேயான அமைதி, பொருளாதாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு இரு நாடுகளின் பங்களிப்பும் முக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்றை நாம் நினைவில் வைத்து கொள்ள வேண்டும். நம்மால் அண்டை நாட்டை ஒருபோதும் மாற்ற முடியாது இல்லையா? இந்த சமயத்தில் நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாட்டை விட்டு வெளியேறியுள்ள ஷேக் ஹசீனாவை இந்தியா விடுவிக்க வேண்டும். அவர் வங்கதேசத்தில் முக்கிய தலைவர்களை சிறைப்படுத்தி, வீட்டு காவலில் வைத்து சித்ரவதை செய்தார். மோசடி செய்து தேர்தலில் வெற்றி பெற்றார். அவரது சர்வாதிகார ஆட்சியை வீழ்த்திய மாணவர்களின் போராட்டம் பற்றி தவறான கருத்துகளை சோசியல் மீடியாக்களில் பரப்புவதை இந்தியா நிறுத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதம் நடந்த பார்லிமென்ட் தேர்தல் குறித்து பல நாடுகள் சந்தேகம் கிளப்பின. ஆனால் இந்தியா மட்டும் ஷேக் ஹசீனாவின் பக்கம் நின்றது. நாட்டில் ஜனநாயகம் உயிர்ப்புடன் இருக்க மக்களுக்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் எதையும் வழங்காமல் சர்வாதிகாரமாக செயல்பட்ட ஷேக் ஹசீனா பற்றி இந்தியா எந்த கேள்வியும் கேட்காமல் ஆதரவாக நின்றது. இதனால் வங்கதேசத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இந்தியா மீது கோபமடைந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஷேக் ஹசீனாவின் பக்கம் இந்தியா இருந்தது தான். நாடு முழுவதும் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். இதனால் வரும் நாட்களில் இந்தியா -வங்கதேசம் இடையேயான உறவு நன்றாக இருக்க ஷேக் ஹசீனாவை இந்தியா வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.