சுங்கச்சாவடி செயல்பாடு குறித்து விளக்கம்! National Highway | Toll Plazes | Tamilnadu
தமிழகத்தில் 6,600 கி.மீ. நீளத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இவற்றில் 65 சுங்கச் சாவடிகள் செயல்படுகின்றன. இதில் 22 சாவடிகள் நீண்ட காலத்துக்கு முன் அமைக்கப்பட்டவை. சாலை அமைப்பதற்கு ஆன செலவு தொகை வசூலான பின், சுங்க கட்டணம் 40 சதவீதமாக குறைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், போக்குவரத்து அமைச்சகம் அவ்வாறு குறைக்கவில்லை. மாறாக, ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்தி வருகிறது. இதனால் போக்குவரத்து செலவு கணிசமாக அதிகரிக்கிறது. அதனால் விலைவாசியும் உயர்கிறது. சுங்கச் சாவடிகள் வாயிலாக வசூல் குவிந்தாலும், நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், 150 விபத்து பகுதிகள் அடையாளம் காணப்பட்டும், அவற்றை சீரமைக்கும் பணி நடக்கவில்லை. சாலை விபத்து மற்றும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. செலவு செய்ததற்கு மேல் வருமானம் கிடைத்துவிட்ட சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் காலாவதி ஆனதாக கருதி, அவற்றை மூட வேண்டும் என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தமிழக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு கடிதம் எழுதினார்.