பங்குகள் கைமாறியதால் உடைந்தது உறவு jeganmohan| sharmila| ysrc|andhra
பங்குகள் கைமாறியதால் உடைந்தது உறவு jeganmohan| sharmila| ysrc|andhra ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. அண்ணன் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் காங்கிரஸ் கட்சிக்கு சென்றார். இப்போது ஆந்திரா காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். அரசியலில் எதிரும் புதிருமாக மாறிவிட்டனர். இப்போது அவர்களின் உறவும் உடைந்துள்ளது. சரஸ்வதி பவர் அண்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இருந்த தமது பங்குகளை ஷர்மிளா சட்டவிரோதமாக அவரது பெயருக்கு மாற்றிவிட்டதாக ஜெகன் குற்றம்சாட்டி உள்ளார். இது தெடர்பாக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தின் ஐதராபாத் கிளையில் அவர் மனுதாக்கல் செய்துள்ளார். சரஸ்வதி பவர் நிறுவனத்தில் எனக்கும் மனைவி பாரதிக்கும் பங்குகள் உள்ளன. அன்பு, பாசத்தால் பரிசு பத்திரம் வாயிலாக அந்த பங்குகளை வழங்குவதாக 2019ல் ஷர்மிளாவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். நிலுவையில் உள்ள அமலாக்கத்துறை வழக்குகள் குறித்தும் குறிப்பிட்டு இருந்தேன். சட்டப்பூர்வ கடமையை நிறைவேற்றாமல் பங்கு பரிமாற்றம் செய்வது ஆபத்து என ஷர்மிளாவுக்கு சொல்லியிருந்தேன். நாளடைவில் எங்கள் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால், அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திரும்ப பெறுவதாக கூறியிருந்தேன். ஆனால், எனது மற்றும் மனைவியின் பங்குகள், ஷர்மிளா மற்றும் தாய் விஜயம்மா ஆகியோர் பெயருக்கு முறைகேடாக மாற்றப்பட்டு உள்ளன. அதனை ரத்து செய்ய வேண்டும். நன்றி உணர்வு இல்லாமல் என் நலன் பற்றி கவலைப்படாமல் ஷர்மிளா செயல்பட்டு இருக்கிறார். அரசியல் ரீதியாக என்னை எதிர்ப்பது மட்டும் இல்லாமல் என் மீது தொடர்ந்து அவதூறு பரப்புகிறார். இதனால் அண்ணன்- தங்கை உறவு சிதைந்து விட்டது. இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை. ஷர்மிளாவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜெகன் கூறியுள்ளார். இந்த மனு மீதான விசாரணையை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் நவம்பருக்கு ஒத்தி வைத்தது.