சூறாவளியுடன் கனமழை; தயார் நிலையில் மீட்பு குழுவினர் odisha rain| cyclone dana|west bengal
சூறாவளியுடன் கனமழை; தயார் நிலையில் மீட்பு குழுவினர் odisha rain| cyclone dana|west bengal வங்க கடலில் உருவாகி உள்ள டானா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளது. இது ஒடிசாவின் தென் கிழக்கே 210 கி.மீ தூரத்தில் உள்ளது. மணிக்கு 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. டானா புயல் இன்று நள்ளிரவில் இருந்து நாளை அதிகாலைக்குள் புரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, ஒடிசாவின் பிதர்கனிகா மற்றும் தம்ராவுக்கு இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கரையை புயல் கடக்கும்போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். புயல் நெருங்கி வருவதையொட்டி, ஒடிசாவின் பல இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. டானா புயலின் தாக்கம் பலமாக இருக்கும் என கருதப்படுவதால், கடலோர மாவட்டங்களில் இருந்து 10 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் ஓடிசா அரசு ஈடுபட்டுள்ளது. நேற்று வரை 3 லட்சத்துக்கு அதிகமானோர் வெளியேற்றப்பட்டனர். குறிப்பாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோர் மாவட்டங்கள் புயலால் அதிகம் பாதிக்கும் ஆபத்து உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இங்கிருக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மயூர்பஞ்சு, ஜகத்சிங்பூர், கட்டாக், ஜஜ்பூர், புரி மாவட்டங்களும் புயல் பாதிப்பு பட்டியலில் உள்ளன. ஒடிசாவின் தாம்ரா, பாரதீப் மற்றும் புரி துறைமுகங்களில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இது, அதி தீவிர புயல் உருவாகி இருப்பதையும், பேரபாயத்தையும் குறிக்கிறது. கோபால்பூர் துறைமுகத்தில் மிகுந்த அபாயத்தை குறிக்கும் 8 ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கையாக, கொல்கத்தா மற்றும் புனனேஷ்வர் ஏர்போர்ட்களில் இருந்து விமானங்கள் பறப்பது இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நிறுத்தப்படுகின்றன. ஒடிசா, மேற்கு வங்கம் வழியாக இயக்கப்படும் சுமார் 200 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மேற்கு வங்கத்தில் 190 உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. புயல் காரணமாக மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. பங்குரா, ஹூக்ளி, ஹவுரா, வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், பாஸ்கிம் புர்பா மெதினிபூர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 3 லட்சம் மக்களை வெளியேற்றும் பணியை மேற்கு வங்க அரசு மேற்கொண்டுள்ளது. நேற்று இரவு வரை 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். ஒடிசா, மேற்கு வங்கம் மாநிலங்களிலும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்திய கடலோர காவல்படை, கடற்படை மற்றும் ராணுவத்தை சேர்ந்த கூடுதல் மீட்பு படையினரும் தயார் படுத்தப்பட்டு உள்ளனர்.