பாதுகாப்பை உறுதி செய்யாத நிர்வாகம் மீது பொங்கிய பெற்றோர்
பாதுகாப்பை உறுதி செய்யாத நிர்வாகம் மீது பொங்கிய பெற்றோர் சென்னை, திருவொற்றியூர், கிராமத்தெருவில் விக்டரி மெட்ரிக் பள்ளி செயல்படுகிறது. கடந்த அக்டோபர் 25ம் தேதி இப்பள்ளியில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. 45 மாணவிகள் பாதிக்கப்பட்டனர். கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. அவர்கள் திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் துறை, கல்வி துறை அதிகாரிகள், போலீசார் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்ற காரணம் சொல்லப்படவில்லை. இச்சம்பவத்தால் பள்ளிக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இடையில் தீபாவளியும் வந்ததால் 10 நாட்கள் விடுமுறைக்கு பின் பள்ளி இன்று திறக்கப்பட்டது. மீண்டும் இன்று பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது. 8 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். விஷயம் அறிந்த பெற்றோர் பள்ளியில் குவிந்தனர். பாதுகாப்பை உறுதி செய்யாமல் பள்ளியை திறந்தது ஏன் என கேட்டு நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்தனர். தங்களது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து சென்றனர். இந்த பரபரப்புக்கு இடையே பள்ளிக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.