ஜார்கண்ட் வெற்றிக்கு பின்னால் இவ்வளோ நடந்திருக்கா? | Jharkhand | Hemant Soren | Kalpana Soren
ஜார்கண்ட் வெற்றிக்கு பின்னால் இவ்வளோ நடந்திருக்கா? | Jharkhand | Hemant Soren | Kalpana Soren ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளில் JMM எனப்படும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் 4வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்த தேர்தல் வெற்றிக்கு பின்னால் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரனின் பங்களிப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை பதிந்த நில முறைகேடு தொடர்பான வழக்கில் கடந்த ஜனவரி மாதம் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜூன் மாதம் ஜாமினில் வெளிவந்து மீண்டும் முதல்வரானார். ஹேம்நாத் சோரன் சிறையில் அடைக்கப்பட்ட போது முதல்வராக இருந்த சம்பாய் சோரன் சட்டசபை தேர்தல் நேரத்தில் பாஜவுக்கு தாவினார். இது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருந்தாலும் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா துணிச்சலாக அரசியலில் களம் கண்டார். அதுவரை பெரிதாக அரசியலில் ஈடுபடாத அவர் கட்சி தலைமை பொறுப்பேற்று தேர்தல் வெற்றிக்கான வேலைகளை தொடங்கினார். சட்டசபை தேர்தலின் போது ஜேஎம்எம் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாக கல்பனா மாறினார். பாஜ தேர்தல் பிரச்சாரத்தில் வங்கதேச ஊடுருவல், இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, லவ் ஜிகாத் முன் வைக்கப்பட்டது. பாஜ வியூகத்தை உடைத்து ஹேம்ந்த் சோரன் கட்சி பழங்குடியின அடையாளம், மாநிலம் உரிமைகள், ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரத்தை மேற்கொண்டது. முக்கியமாக பழங்குடியின பெண்களிடையே கல்பனா தனது பிரசாரங்களின் மூலம் செல்வாக்கு பெற்றார். தங்கள் கட்சி செயல்படுத்திய சமூக நலத் திட்டங்களை பிரதானதப்படுத்தி கல்பனா மேடைகள் தோறும் பேசினார். சமூக நல திட்டங்களைச் செயல்படுத்தியதால் தான் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார். பழங்குடியின பெண்களுக்கு புரியும் வகையில் கல்பனாவின் அரசியல் பேச்சு அமைந்தது. தனது ஒவ்வொரு பேச்சையும் கல்பனா நன்கு திட்டமிட்டு தயாரித்துப் பேசினார். ஜார்கண்ட் சட்டசபை தேர்தல் இறுதி கட்ட பிரசாரத்தின்போது கல்பனாவின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அப்போது சாமர்த்தியமாக செயல்பட்டு செல்போன் மூலம் பேரணியில் வைக்கப்பட்டிருந்த மைக்கில் பேசினார். ஹேமந்த் சோரனின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் கல்பனாவின் வியூகமே முக்கிய காரணம் என்கின்றனர் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர். ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் கல்வியை முடித்த கல்பனா புவனேஸ்வரில் பொறியியல், எம்பிஏ பட்டங்களைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.