ஆதவ் அர்ஜுனா தூக்கியடிப்பு... அடுத்த ட்விஸ்ட் தெரியுமா? | Aadav Arjuna Suspend | VCK | Aadav vs DMK
ஆதவ் அர்ஜுனா தூக்கியடிப்பு... அடுத்த ட்விஸ்ட் தெரியுமா? | Aadav Arjuna Suspend | VCK | Aadav vs DMK சில நாட்கள் முன்பு நடந்த அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா, தமிழக அரசியல் களத்தில் புதிய புயலை உண்டு பண்ணியது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும், விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் திமுகவுக்கு எதிராக பேசிய தடாலடிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜய், ஆதவ் பேச்சு திமுக தலைமைக்கு கோபத்தை உண்டு பண்ணியது. கூட்டணியில் இருப்பதால் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதவ் பேச்சு தர்மச்சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆதவ் பேசியது 100 சதவீதம் தவறு. இந்த முறை அவர் மீது நடவடிக்கை உறுதி. அவரிடம் விசிக விளக்கம் கேட்கும் என்று திருமாவளவனும் சொல்லி இருந்தார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 6 மாதங்களுக்கு அவரை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறார் திருமாளவன். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அண்மை காலமாக கட்சி நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார் என்று கட்சி தலைமை கவனத்துக்கு வந்தது. இது பற்றி 7ம் தேதி பொதுச்செயலாளர் உட்பட முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கட்சி தலைமை அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக ஆதவ் எதிர்மறையாக செயல்பட்டு வருகிறார். மேலோட்டமாக நோக்கினால் கட்சி நலன் மற்றும் அதிகார வலிமைக்காக அவரது செயல்பாடு இருப்பது போல் தோன்றினாலும், கட்சி மற்றும் தலைமை மீதான நன்மதிப்பு, நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பொதுவெளியில் கடும் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. அவரது போக்கு கட்சி பொறுப்பாளர்களிடையே நிலவும் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இது கட்சியினருக்கு ஒரு தவறான முன்மாதிரியாக அமைந்து விடும் சூழலை உருவாக்கி இருக்கிறது. இதை கருத்தில் கொண்டும் கட்சியின் நலன்கள் கருதியும் ஆதவ் அர்ஜுனா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதென தலைவர், பொதுச்செயலாளர்கள் அடங்கிய மூவர் தலைமை நிர்வாக குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஆறு மாத காலங்களுக்கு கட்சியில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்படுகிறார் என்று திருமாவளவன் கூறியுள்ளார். யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப்பெரிய அரசியல் புயலை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறது அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா. இந்த விழா நடப்பதற்கு சில வாரங்கள் முன்பே சர்ச்சை வெடிக்க ஆரம்பித்தது. பிரமாண்டமாக கூடி இருந்த தொண்டர்கள் முன்பு பாஜவையும், திமுகவையும் வெளுத்து வாங்கி முதல் மாநாட்டை வெற்றியுடன் நிறைவு செய்திருந்தார் விஜய். அந்த மாநாட்டில் தவெகவின் கொள்கைகளை பிரகடனப்படுத்திய விஜய், கூட்டணியிலும் பங்கு, ஆட்சியிலும் பங்கு என்ற தத்துவத்தை முன்வைத்தார் விஜய். இது அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. பல கட்சிகள் விஜயின் அறிவிப்பை வரவேற்றன. தவெக மாநாட்டுக்கு பிறகு தான் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா பற்றிய பேச்சு அடிபட ஆரம்பித்தது. விஜயும், திருமாவளவனும் ஒரே மேடையில் பேச இருக்கின்றனர். இது கூட்டணிக்கான அச்சாரம். திமுகவில் இருந்து விசிக விலகி விஜய் கட்சியில் சேரும் என்று பலர் ஆரூடம் கூற ஆரம்பித்தனர். இன்னொரு பக்கம், விஜய் கட்சியின் இந்த கொள்கையை உறுதியாக பற்றிக்கொண்ட ஆதவ் அர்ஜுனா, அது பற்றி ஓபனாக பேச ஆரம்பித்தார். வெற்றிக்காக மட்டும் கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி விட்டு தூக்கி எறிபவர்கள், ஆட்சியிலும் தங்களுக்கு பங்கு தர வேண்டும் என்று பேசி நேரடியாக திமுகவை அட்டாக் செய்தார். ஆதவ் பேச்சுக்கு விசிகவில் ஒரு தரப்பினர் வரவேற்றனர். அதே நேரம் அவருக்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. ஆதவ் கூறிய கருத்துக்கு பிறகு விஜய் கட்சியுடன் விசிக சேரப்போகிறது என்ற பேச்சு வலுவாக அடிபட்டது. அதே நேரம், ஆதவை கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்றும், விஜய் பங்கேற்கும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு போக கூடாது என்றும் திமுக தலைமையிடம் இருந்து திருமாவளவனுக்கு நெருக்கடி வந்ததாகவும் தகவல் வெளியானது. திருமாவளவன் போகும் இடம் எல்லாம் இதை பற்றியே நிருபர்கள் கேள்வி கேட்டனர். ஒரு கட்டத்தில் டென்சன் ஆன திருமாவளவன், நான் 100 சதவீதம் வேறு கட்சிக்கு போகவில்லை. 2026 தேர்தலில் திமுகவுன் தான் கூட்டணி என்று அறிவித்தார். ஆனாலும் சர்ச்சை மேகம் திருமாவளவனையும், விசிகவையும் துரத்தியது. இந்த பரபரப்புக்கு ஊடே கடைசி நேரத்தில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதை தவிர்த்தார் திருமாவளவன். அதற்கு அவர் வேறு காரணத்தை கூறினாலும், திமுக நெருக்கடி தான் காரணம் என்று எதிர்கட்சிகளில் இருந்து விமர்சன குரல் வந்தது. இவ்வளவு விஷயங்களுக்கு பிறகு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தான் விஜயும், ஆதவ் அர்ஜுனாவும் சேர்ந்து திமுகவை ரவுண்டு கட்டி விளாசினர். அவர்கள் சொல்லி வைத்தார் போல் ஒரே குரலில் ஒலிப்பது போல் இருந்தது. திமுக கூட்டணியில் கட்சிகளின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் வேறு எந்த தலைவர்களும் இதற்கு முன்பு இப்படி திமுகவை விமர்சித்தது இல்லை. அந்த அளவுக்கு வெளுத்து வாங்கினார் ஆதவ். திருமாவளவனை இந்த விழாவுக்கு வர விடாமல் திமுக தடுத்து விட்டதாக சொன்ன ஆதவ், தலித் கைகளில் மாட்டப்பட்ட விலங்கு விரைவில் உடையும் என்றார். கருணாநிதி, ஸ்டாலின், அடுத்து உதயநிதி என கட்சியிலும், ஆட்சியிலும் தலைமை பதவிக்கு ஒரே குடும்பத்தினர் வருவதை மன்னராட்சி என்று விமர்சித்த ஆதவ், 2026ல் இந்த மன்னராட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். விஜய் அறிவித்த கட்சியிலும் ஆட்சியிலும் பங்கு விஷயத்தை புகழ்ந்த ஆதவ், அதை விமர்சித்த திமுகவை விளாசினார். தன்னை சுற்றி இருக்கும் 2000 கோடி ரூபாய் தொழிலை உதறிவிட்டு விஜய் வந்திருக்கிறார். ஆனால் அரசியல் அதிகாரம் மூலம் மொத்த தமிழ் சினிமாவையும் ஒருத்தர் கட்டுப்படுத்துவதாக உதயநிதியை சாடினார். 2026ல் மன்னராட்சியை ஒழித்து கட்டி விட்டு ஒரு கருத்தியல் தலைவன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்று விஜயை மறைமுகமாக கைகாட்டினார் ஆதவ். அவரது இந்த பேச்சு தான் இப்போது விசிகவில் இருந்து 6 மாதங்களுக்கு அவரை சஸ்பெண்ட் செய்ய வைத்திருக்கிறது. ஆதவ் விவகாரம் இதோடு முடிந்து விடாது. என்னும் நிறைய ட்விஸ்ட் இருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.