கிண்டி மருத்துவரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமின் | Guindy Government Hospital | Guindy GH Case
கிண்டி மருத்துவரை தாக்கிய விக்னேஷுக்கு ஜாமின் | Guindy Government Hospital | Guindy GH Case கிண்டி அரசு மருத்துவமனையில், புற்றுநோய் சிறப்பு மருத்துவர் பாலாஜி மீது நடத்தப்பட்ட கத்தி குத்து சம்பவம் மாநிலத்தை உலுக்கியது. மருத்துவரை குத்தி விட்டு தப்ப முயன்ற விக்னேஷ் என்ற இளைஞரை மருத்துவமனை ஊழியர்கள் மடக்கி பிடித்தனர். தனது தாய்க்கு உரிய சிகிச்சை அளிக்காததால் இந்த முடிவு எடுத்ததாக விக்னேஷ் வாக்கு மூலம் கொடுத்தார். போலீசார் விக்னேஷ் மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். விக்னேஷ் தரப்பில் ஜாமின் கோரி சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மனு செய்யப்பட்டது. நீதிபதி கார்த்திகேயன் விசாரித்தார். ஜாமின் வழங்கக் கூடாது என்ற போலீஸ் தரப்பு வாதத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். விக்னேஷ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காத காரணத்தால், ஏற்பட்ட விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. நோயாளிக்கு சரியான சிகிச்சை அளித்திருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்திருக்காது என விக்னேஷ் தரப்பு வக்கீல் வாதிட்டார். நோயாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அரசு தரப்பில் எந்த பதிலும் கூறப்படவில்லை என கூறப்படுகிறது. தொடர்ந்து விக்னேஷ்க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். வேலூர் சத்துவாச்சேரி போலீஸ் ஸ்டேஷனில் மறுஉத்தரவு வரும் வரை தினமும் கையெழுத்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.