உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கள்ளச்சாராய சம்பவம்: திமுகவின் நோக்கம் நீதிபதிகளுக்கு புரிந்துவிட்டது

கள்ளச்சாராய சம்பவம்: திமுகவின் நோக்கம் நீதிபதிகளுக்கு புரிந்துவிட்டது

கள்ளச்சாராய சம்பவம்: திமுகவின் நோக்கம் நீதிபதிகளுக்கு புரிந்துவிட்டது பாமக நிறுவனர் ராமதாசின் அறிக்கை: கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூனில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் இறந்த சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு செல்லும் என்றும்; அதை மாற்ற முடியாது என்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்து இருக்கிறது. உண்மைகளை வெளிக்கொண்டுவர வகை செய்யும் இந்த தீர்ப்பு வரவேற்க தக்கது. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் அமர்வு, கள்ளச்சாராய வழக்கை சிபிஐ விசாரிப்பதால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படப்போகிறது? இந்த வழக்கை நீங்களே விசாரிக்க வேண்டும் என்று இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? அதுவே உங்களின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கட்டும் என்று கூறியுள்ளனர். இதன்மூலம், தமிழக அரசின் நோக்கத்தை அவர்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. வழக்கமாக ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசுகள் மேல்முறையீடு செய்யும்போது, எதிர்மனுதாரர்கள் பதிலை பெற்று விசாரித்து தீர்ப்பளிப்பது தான் வழக்கம். ஆனால், தொடக்க நிலையிலேயே தமிழக அரசின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டிருப்பது அரிதிலும் அரிதான நிகழ்வு. சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டால், அனைத்து உண்மைகளும் வெளிவந்துவிடும் என்பதுதான் திமுக அரசின் அச்சம். அதனால்தான் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் திமுகவினருக்கு உள்ள தொடர்புகளையும், அதிர்ச்சியூட்டும் உண்மைகளையும் மூடி மறைக்கவேண்டும் என்று திமுக அரசு மேற்கொண்ட முயற்சிக்கு கிடைத்த சம்மட்டி அடி என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ