பாதி வழியில் பெண்ணை இறக்கி விட்ட நடத்துனர்கள்
திருச்சி கல்லணையை சேர்ந்தவர் சர்மிளா. கோவையில் ஒரு கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு செல்ல சிங்காநல்லூரில் இருந்து பஸ் ஏறினார். மகள்களுக்காக புத்தாடைகள், பலகாரங்கள் அடங்கிய கட்டை பையை எடுத்து சென்றார். சர்மிளா தமக்கு டிக்கெட் எடுத்தார். அந்த கட்டைப்பைக்கு 500 ரூபாய் லக்கேஜ் கட்டணம் தரும்படி கண்டக்டர் கேட்டுள்ளார். சர்மிளா கொடுக்க மறுத்ததால், அவரை வெள்ளகோயில் அருகே இறங்கி விட்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மற்றொரு பஸ்சில் சர்மிளா ஏறினார். சீட் கிடைக்காததால் படிக்கட்டு அருகே கீழே அமர்ந்து பயணித்தார். வெள்ளக்கோயில் உணவகம் ஒன்றில் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது சர்மிளாவை ஏற்கனவே இறக்கிவிட்ட பஸ் கண்டக்டரும், தற்போது அவர் வந்த பஸ்சின் கண்டக்டரும் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதன் பின், பஸ் கிளம்பும்போது, சர்மிளாவிடம் 2வது பஸ் கண்டக்டரும் கட்டை பைக்கு 500 ரூபாய் லக்கேஜ் தரும்படி கேட்டு உள்ளார். சர்மிளா தரமுடியாது என வாக்குவாதம் செய்ததால் அவரை பாதி வழியில் இறக்கி விட்டுள்ளனர்.