நைஜீரியாவில் 100 பேர் மரணம்: வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம் Gunmen killed 100 people |Nige
நைஜீரியாவில் 100 பேர் மரணம்: வீடு புகுந்து மர்ம கும்பல் அட்டூழியம் Gunmen killed 100 people |Nigeria |farmers VS herders | மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பெனுவ் Benue மாநிலத்தில் உள்ள யெலேவாடா Yelewata கிராமத்தில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் புகுந்தனர். வீடு வீடாக சென்று மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். சில வீடுகளை வெளிப்புறமாக பூட்டி தீ வைத்தனர். இதில் 100 பேர் வரை பரிதாபமாக இறந்தனர். இன்னும் பலர் காணாமல் போய்விட்டனர். அவர்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகிப் போயிருக்கலாம் என கூறப்படுகிறது. நள்ளிரவில் துவங்கி அதிகாலை வரை இந்த மனித வேட்டை நடந்துள்ளது. பலர் தூங்கும்போதே கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர். காயம் பட்டவர்களுக்கு மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை என நைஜீரியாவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. இந்த கொடூர சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், இதன் பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. நைஜீரியாவின் வடபகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்கு பசுமைப்பகுதிகள் மற்றும் தண்ணீரை தேடிச் செல்லும்போது நில உரிமையாளர்களுடன் மோதல் ஏற்படுகிறது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் நீண்ட காலமாக நடக்கிறது. இதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த மாதம் நில உரிமையாளர்கள் துப்பாக்கி ஏந்திய ஆசாமிகள் பெனுவ் மாநிலத்திலுள்ள இன்னொரு கிராமத்தில் புகுந்து சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன் ஏப்ரல் மாதம் பிளேட்டேவ் Plateau மாநிலத்தில் இதே போல ஒரு கிராமத்தில் புகுந்து மர்ம ஆசாமிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர்.