தமிழகத்தில் கால் ஊன்றும் மாவோயிஸ்ட்கள் | NIA Investigation | Maoist
வேலூரில் மாவோயிஸ்ட் கூட்டம் NIA விசாரணையில் பகீர் தகவல்! தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் 11 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர் மாவோயிஸ்ட் பண்ணைபுரம் கார்த்திக். சமீபத்தில் சென்னையில் கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த இவரின் கூட்டாளி சந்தோஷ்குமார் என்பவர் ஓசூரில் கைதானார். இவர்களுக்கு வேலுாரைச் சேர்ந்த மாவோயிஸ்ட் ராகவேந்திரா தலைவராக செயல்பட்டது தெரியவந்தது. கேரளாவில் கைதான இவரை காவலில் எடுத்து என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரிக்கின்றனர். ராகவேந்திராவின் சொந்த ஊர் வேலுார் மாவட்டம் சத்துவாச்சாரி. இவரின் தந்தை ராஜன், வணிக வரித்துறையில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். ராகவேந்திரா பட்டப்படிப்பை பாதியில் நிறுத்தி உள்ளார். மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். தன் பெயரை வினோத்குமார், ரவிமுகேஷ் என மாற்றி, கேரளா மற்றும் தமிழகத்தில் ஆதார் கார்டுகள் வாங்கி உள்ளார். கேரள மாநிலம், எடக்கரை வனப்பகுதியில் 20 மாவோயிஸ்ட்கள் ஆயுத பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு, ராகவேந்திரா தான் தலைமை தாங்கினார். இவர்கள், மேற்கு தொடர்ச்சி மலையின், தமிழகம், கேரளா, கர்நாடகா வனப்பகுதிகளை, சிறப்பு மண்டலமாக அறிவித்து செயல்பட்டனர். கடந்த 2015ல் மாவோயிஸ்ட் ரூபேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின், மாவோயிஸ்ட்களை வழிநடத்தும் பொறுப்பை ராகவேந்திரா ஏற்றார். அதே ஆண்டு கேரள மாநிலம், நிலம்பூர் வனப்பகுதியில், மாவோயிஸ்ட்கள் ஆயுதப்பயிற்சி பெற்றனர். இதில், குப்பு தேவராஜ் என்பவர், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பாலக்காடு மாவட்டம், மஞ்சக்கண்டியில், மாவோயிஸ்ட் மணிவாசகம், ரேமா, பெரிய கார்த்திக், அரவிந்த் ஆகியோரும் கொல்லப்பட்டனர். கடந்த 2019ல் வயநாடு பகுதியில் மாவோயிஸ்ட் கேடர் லீடர் ஜலீல், 2020ல் மற்றொரு கேடர் லீடர் வேல்முருகன், என்கவுன்டர் செய்யப்பட்டனர். இதனால், ராகவேந்திரா தலைமையிலான மாவோயிஸ்ட்கள் நிலை குலைந்தனர். அமைப்பை பலப்படுத்த, ராகவேந்திரா தலைமையில், பண்ணைபுரம் கார்த்திக், சந்தோஷ்குமார் மற்றும் ஷர்மிளா ஆகியோர், தமிழகத்தில் வேலுாரிலும், கேரளாவில் கண்ணுாரிலும் ரகசிய கூட்டங்கள் நடத்தியது தெரியவந்துள்ளது. இவர்கள் கடந்த 2021ல் நிலம்பூரில் ஆயுதப் பயிற்சி பெற முயன்றனர். அப்போது தான் ராகவேந்திரா சிக்கினார் என என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.