மசோதாவில் திருத்தங்கள் தேவை பார்லி. குழுவிடம் நீதிபதிகள் கருத்து One Nation One Election | Chandrach
மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. இதற்கான மசோதா கடந்த ஆண்டு லோக் சபாவில் தாக்கலானது. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா பார்லிமென்ட் கூட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது. பாஜ எம்.பி. சவுத்ரி தலைமையில் அமைந்த எம்.பி.க்கள் குழு மசோதாவை ஆய்வு செய்து வருகிறது. சட்ட நிபுணர்களின் துணை கொண்டு, பார்லிமென்ட் கூட்டுக் குழு கருத்துகளை கேட்டு வருகிறது. இதுவரை 7 அமர்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றில் 4 முன்னாள் தலைமை நீதிபதிகள் உள்பட சட்ட நிபுணர்கள் பலர் விளக்கம் அளித்து உள்ளனர். நேற்று எட்டாவது அமர்வு நடந்தது. இதில் சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் கேஹர்(Khehar) கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். அப்போது நீதிபதி சந்திரசூட் கூறியதாவது ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை (Basic Structure of the Constitution ) மீறுவதில்லை. லோக்சபா தேர்தலையும், மாநிலங்களின் தேர்தலையும் தனித் தனியாகத்தான் நடத்த வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டம் எந்த இடத்திலும் கூறவில்லை. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு அவை நிபந்தனைகளாகவும் இல்லை. இந்திய குடியரசு தோன்றிய ஆரம்ப காலங்களில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும்படிதான் அரசியல் அமைப்பு வடிவமைக்கப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் அரசு கொண்டுவந்துள்ள மசோதாவில் தேர்தல் ஆணையத்துக்கு தரப்பட்டுள்ள அதிக அதிகாரங்கள் மற்றும் அவசரகாலம் தொடர்பான விதிகளில் சிறிய திருத்தங்கள் செய்தாக வேண்டும். அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் சட்ட குழப்பங்களை தவிர்க்க முடியும். அரசியலமைப்பு வரம்புக்குள் தேர்தல் நடத்தப்பட்டால் சட்ட சபைகளின் பதவிக் காலங்கள் குறைக்கப்பட்டாலும் ஓட்டு போடுபவர்களின் உரிமைகள் பாதிக்கப்படாது. சட்ட சபைகளை முன் கூட்டியே கலைப்பது என்பது அரசியலமைப்பை மீறுவதாகாது என்று நீதிபதி சந்திரசூட் கூறினார். முன்னாள் தலைமை நீதிபதி கேஹரும் சந்திரசூடின் கருத்துகளுடன் ஒத்துப் போய் தனது கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த மசோதா அரசியல் அமைப்பின் முக்கிய கொள்கைகளை மீறவில்லை. அதே சமயம் தேர்தல் ஆணையத்துக்கு சில விருப்ப உரிமைகளை மசோதா வழங்குகிறது. அதில் திருத்தம் செய்ய வேண்டும் என நீதிபதி கேஹர் வலியுறுத்தினார்.