பாகிஸ்தானுக்கு இந்தியா கொடுத்த 7வது அடி-முழு தகவல் operation sindoor | pahalgam attack | ind vs pak
பயங்கரவாத ஆதரவு நாடான பாகிஸ்தானுக்கு இந்தியாவிடம் அடி வாங்குவதே வாடிக்கையாக உள்ளது. இதுவரை 7 முறை பாகிஸ்தானை இந்தியா தாக்கியுள்ளது. முதலில் காஷ்மீர் போர். 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது, காஷ்மீர் தனிப்பகுதியாக இருந்தது. காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்கள். ஆட்சி செய்த ஹிந்து மன்னர் ஹரி சிங், தனி நாடாக செயல்பட விரும்பினார். இவருக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டியது பாகிஸ்தான். காஷ்மீர் பழங்குடியினருக்கு ஆயுதங்கள் வழங்கியது. இதையடுத்து மன்னர், இந்தியாவின் உதவியை நாடினார். படைகளை இந்தியா அனுப்பியது. 1947 அக்டோபர் 22 முதல் 1948 டிசம்பர் 31 வரை போர் நடந்தது. முடிவில் இந்தியாவுடன் காஷ்மீர் இணைக்கப்பட்டது. இந்தியாவில் 7,000 பேரும், பாகிஸ்தானில் 20,000 பேரும் பலியாகினர். அப்போது காஷ்மீரின் மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தான் வசம் இருந்தது. இப்பகுதி தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. அடுத்ததாக இரண்டாம் காஷ்மீர் போர் வந்தது. காஷ்மீர் எங்களுடையது என்று சொல்லி மீண்டும் 1965 ஆகஸ்டில் ஆபரேஷன் ஜிப்ரால்டர் என்ற பெயரில் பாகிஸ்தான் தாக்குதலை துவங்கியது. இதற்கு இந்தியா பெரிய அளவில் படைகளை அனுப்பி பதில் தாக்குதல் நடத்தியது. ரஷ்யா, அமெரிக்கா தலையீட்டில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்காண்ட் நகரில், இந்திய பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி, பாகிஸ்தான் பிரதமர் முகமது அயூப்கான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் வந்தது. அடுத்து வங்கதேச போர். ஆங்கிலேயர் சுதந்திரம் வழங்கியபோது, மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரு பகுதியாக இருந்தது. மேற்கு பாகிஸ்தானில் உருது, கிழக்கு பாகிஸ்தானில் வங்க மொழி பேசும் மக்கள் அதிகம். ஆனால் பாகிஸ்தான் அலுவல் மொழியாக உருது மட்டுமே இருக்கும் என்று ஜின்னா அறிவித்தார். இதனால் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தனிநாடு போராட்டத்தை துவங்கினர். இதன் தொடர்ச்சியாக 1971 மார்ச் 26ல் வங்கதேச விடுதலைப் போர் துவங்கியது. இரு தரப்புக்கும் சண்டை நடந்தது. வங்கதேச தனிநாடு கோரிக்கைக்கு இந்தியா ஆதரவு அளித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக 1971 டிசம்பர் 3ல் போரில் இறங்கியது. இந்தியாவின் தரை, வான்வழித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 1971 டிசம்பர் 16ல் பாகிஸ்தானின் 90,000 ராணுவ வீரர்கள் இந்தியாவிடம் சரண் அடைந்தனர். 13 நாளில் போர் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் உருவானது. நான்காவதாக கார்கில் போர். 1999 ஏப்ரலில் கார்கில் பகுதிக்கு பாதுகாப்புப் பணியை தொடரச் சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், பயங்கரவாதிகள் என 5,000 பேர், இந்திய பகுதிக்குள் ஊடுருவி இருந்தனர். பாகிஸ்தானில் திட்டமிடப்பட்ட ஆப்பரேஷன் பாதர் என்ற பெயரில் நடத்தப்பட்ட அத்துமீறல் இது என்பதை இந்தியா கண்டுபிடித்தது. பாகிஸ்தான் சதியை முறியடிக்க ஆப்பரேஷன் விஜய் என்ற பெயரில் இந்தியா 1999 மே 3ல் ராணுவ நடவடிக்கையை துவங்கியது. வான்வழித் தாக்குதல் மூலம் இந்திய ராணுவம், தன் நிலைகளை ஒவ்வொன்றாக கைப்பற்ற ஆரம்பித்தது. ஆதரவு தேடி அமெரிக்காவுக்கு ஓடினார் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அமெரிக்க அதிபர் பில் கிளின்டனும் பாகிஸ்தானின் போக்கை விமர்சிக்க, வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் பின்வாங்கியது. ஜூலை 26ல் இந்திய ராணுவம் கார்கில் மலையில் வெற்றிக்கொடி நாட்டியது. அதற்கு பிறகு வந்தது தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 1.0 2016 செப்டம்பர் 18ல் காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 19 ராணுவ வீரர்கள் பலியாகினர். ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தான் இதற்கு காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது. இதற்கு பதிலடி தரும் விதமாக செப்டம்பர் 29ல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஆறாவதாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 2019 பிப்ரவரி 14ல், காஷ்மீரின் புல்வாமாவில் இந்திய ராணுவ வாகனங்கள் ரோந்து செல்லும்போது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பதிலடியாக பிப்ரவரி 26ல், பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பால்கோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி அழித்தது.