பாக் பங்கு சந்தையை காலி செய்யும் முதலீட்டாளர்கள் | Pakistan stock market | PSX | KSE
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தியதில் 26 பேர் இறந்த சம்பவம் நாடும் முழுவதும் அதிர்வலையை உண்டாக்கி உள்ளது. பதிலடி தருவதற்கு இந்தியா தயாராகி வருகிறது. பிரதமர் மோடி தலைமையில் முப்படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தரார், இந்தியா 24 முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது என கூறியிருந்தார். இதனால் உண்டான பதற்றம் காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டது. பாகிஸ்தான் பங்குசந்தை புள்ளி விபரங்களின் படி பி.எஸ்.எக்ஸ் 3,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. பங்குகளின் விலை நாள் முழுவதும் கீழ்நோக்கிய போக்கைத் தொடர்ந்தது. இறுதியாக குறியீட்டெண் 1,11,326 இல் முடிவடைந்தது. மொத்தம் 3,545 புள்ளிகள் சரிந்தது. மொத்தமாக பாகிஸ்தான் பங்குசந்தையின் 453 நிறுவனங்களில் 336 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இது முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களிடையே எதிர்கால சந்தை நிலவரம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகமாக விற்றதால் சந்தை சரிந்தது. இதை Panic selling என்கின்றனர். இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்தியா கொடுக்கப்போகும் பதிலடி குறித்த பயமாகும். ஏற்கனவே கடந்த வாரம் இந்தியா ஏவுகணை சோதனை செய்தபோதும் பாகிஸ்தான் பங்கு சந்தை கடுமையாக சரிந்தது குறிப்பிடத்தக்கது.