மகளை இழந்த ஆட்டோ டிரைவரின் கதறல் | Payal Khatik | London | Air India Flight Crash
வாட்டி எடுக்கும் வறுமை, ஆட்டோ ஓட்டும் அப்பா, குடும்பத்துக்காக உழைக்கும் அம்மா; எப்படியும் மகள் கரை சேர்த்து விடுவாள் என நம்பி இருந்தனர். அழகான இந்த குடும்பத்தின் கனவை கரியாக்கிவிட்டது ஆமதாபாத் விமான விபத்து. சமீபத்தில் விபத்துக்குள்ளான ஆமதாபாத்-லண்டன் ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் பயல் காதிக் என்வரும் அடக்கம். குஜராத் மாநிலம் ஹிமாத்நகரை சேர்ந்தவர். ஆட்டோ ஓட்டுநரின் மகள். உதய்பூரில் பிடெக் முடித்துள்ள காதிக், எம்டெக் படிப்பதற்காக லண்டன் செல்ல முடிவு செய்தார். குடும்பம் வறுமையான சூழலில் இருந்தாலும் அவரது தந்தை கடன் வாங்கியாவது மகளை படிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தனக்கு தெரிந்தவர்கள், உறவினர்கள் என அவரால் முடிந்த அளவுக்கு கடன் வாங்கி மகள் லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தார். அவரது குடும்பத்தில் இருந்து முதல் ஆளாக தனது மகள் வெளிநாடு செல்ல போகிறார் என்கிற ஆசையோடு இருந்தார். லண்டன் செல்ல தயாரான பயல் காதிக் ஜூன் 12 காலை 10 மணிக்கே ஏர்போர்ட் வந்துள்ளார். அவருடன் மொத்த குடும்பமும் ஏர்போர்ட் வந்து வழி அனுப்பி வைத்தது. மகள் படித்து முடித்ததும் நல்ல வேலைக்கு சென்றால் குடும்பம் வறுமையில் இருந்து மீளும், கடனை திருப்பி செலுத்தி விடலாம் என தந்தை நினைத்துள்ளார். அவரது கனவு ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. ஆனந்த கண்ணீருடன் கிளம்பிய மகளை கடைசியாக கருகிய சடலமாகவே பார்த்துள்ளார். பயல் காதிக் இழப்பு அவரது குடும்பத்தினரை மீளா துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. பிடெக் முடித்து இருந்தாலும் குடும்ப சூழலை உணர்ந்து மாணவர்களுக்கு டியூசன் சொல்லி கொடுத்தும் வந்துள்ளார். அந்த வருமானம் குடும்பத்திற்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. கஷ்டங்களை சுமந்து வளர்ந்த என் மகளின் முடிவு இப்படி இருந்திருக்க கூடாது என அவரது தந்தை கதறி அழுதார். ஆமதாபாத் விமான விபத்துக்கு முன் ஏர்போர்ட் வெளியே பயல் காதிக் குடும்பத்துடன் எடுத்த போட்டோ காண்போர் மனதை உருக செய்கிறது.