மக்களை திடீரென தாக்கிய இளைஞர்கள்: பரபரப்பு தகவல் People attacked 4 youngsters sword bottle rasip
தமிழகத்தில் மதுபோதையால் நடக்கும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. போலீஸ் மீது ரவுடிகளுக்கு பயம் விட்டுப் போச்சு என்பதை உணர்த்தும் பகீர் சம்பவம் சற்று நேரத்துக்கு முன் நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புது பஸ் நிலையத்தில் உள்ள மதுக்கடையில் இன்று மாலை 4 இளைஞர்கள் மது குடித்தனர். போதை தலைக்கேறியதும் அங்கிருந்தவர்களிடம் வம்பிழுத்து தாக்கினர். பேக்கில் வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்துக் காட்டி மிரட்டினர். பிறகு, புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பட்டணம் சாலைக்கு நடந்து சென்றனர். வழியில் போவோர் வருவோரிடம் தகராறு செய்து தாக்கினர். போலீஸ் பேரிகார்டை நடுரோட்டில் இழுத்துப்போட்டு சேதப்படுத்தினர். தட்டிக் கேட்ட பொதுமக்களையும் தாக்கினர். இப்படி வழியெங்கும் 10 பேரை பாட்டிலாலும் பட்டா கத்தியாலும் தாக்கினர். தகாத வார்த்தைகளாலும் திட்டினர். பலர் இவர்களை பார்த்து ஓட்டம் பிடித்தனர். வாலிபர்கள் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஐந்து பேர் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு கட்டத்தில் பொதுமக்களில் சிலர் இளைஞர்களை விரட்டிச் சென்று ஒரு தெருவில் மடக்கி அடி போட்டனர். போதையில் ஓட முடியாமல் மாட்டிக் கொண்ட இளைஞர்களை போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். ஒருவன் மட்டும் தப்பி விட்டான். பிடிபட்ட 3 இளைஞர்களை போலீசார் ராசிபுரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். கைதான வாலிபர்கள் ரியாஸ்துன் (21), அஜ்புதீன் (20), பாபு(26) என தெரிய வந்தது. கிடைக்கும் வேலையை செய்து விட்டு ஊர் சுற்றும் இந்த இளைஞர்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவர்கள். அடிக்கடி இதுபோல தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மூவர் மீதும் ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன. ஒருவன் சிறைக்கு சென்று விட்டு கடந்த வாரம்தான் வெளியே வந்துள்ளான். தப்பிய 4வது இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர். சாலையில் சென்ற பொது மக்களை வாலிபர்கள் தாக்கிய சம்பவம் ராசிபுரம் மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. #Namakkal #Rasipuram #CrimeNews #YouthViolence #SwordAttack #BottleFight #PoliceAction #InjuredYouth #Arrested #EscapedSuspect #TensionInTown #LocalNews #BreakingNews #SafetyConcerns #CommunityAlert #ViolencePrevention #LawAndOrder #PublicSafety #YouthCrime