ஆனைமலை வார சந்தையில் திமுக நிர்வாகி அட்டூழியம்! | Pollachi | vegetable market | Weekly market
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த கடைகளை திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் 3 பேர் குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும் கடைக்கு 100 முதல் 200 ரூபாய் வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது. கிராமப்புறங்களில் இருந்து வரும் வியாபாரிகள் பலர் இங்கு காய்கறிகள் விற்று வாழ்வாதாரத்தை பெற்று வருகின்றனர். நேற்று சந்தை துவங்கியதும் வயதான மூதாட்டி ஒருவர் தரையில் உட்கார்ந்து சிறிய தட்டுகளில் மிளகாய் வியாபாரம் செய்து வந்துள்ளார். அங்கு வந்த குத்தகைதாரரும் ஆனைமலை திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகியுமான சந்தோஷ்குமார், மூதாட்டியிடம் தகராறில் ஈடுபட்டார். ஓசியில கடை போடுவியா? என பணம் கேட்டு வாக்குவாதம் செய்தார். பணம் தர மறுத்த அவரிடம் தகாத வார்த்தையால் திட்டி மிளகாய் வைத்திருந்த தட்டுகளை தூக்கி எறிந்தார். அந்த மூதாட்டி அழுது புலம்பியது அங்குள்ளவர்கள் மனதை உலுக்கியது. சுற்றி இருந்தவர்கள் எடுத்த இது தொடர்பான வீடியோ வைரலாகி கண்டனங்கள் குவிகிறது. மத்திய அரசின் தெருவோர வியாபாரி வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் மாநில அரசின் கீழ் என்ன ஆனது என ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.