மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது President |rule |Manipur| Implemented | Home Ministry |
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநில சட்ட சபைக்கு 2022ல் தேர்தல் நடந்தது. பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. 2வது முறையாக பிரேன்சிங் முதல்வர் ஆனார். 2023 மே மாதம் அம்மாநிலத்தின் முக்கியமான இரண்டு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு கலவரமானது. தொடர்ந்து பல மாதங்கள் வன்முறைகள் நடந்தன. 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தனர். ஆளும் பாஜ ஆட்சியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 2024 லோக் சபா தேர்தலிலும் மணிப்பூர் பிரச்னை பெரிதாக்கப்பட்டது. இதனிடையே கலவரத்தை முதல்வர் தூண்டும் வகையில் பேசியதாக ஆடியோ ஒன்றும் வெளியாகி பிரச்னையை சிக்கலாக்கியது. முதல்வர் பிரேன் சிங்கை பாஜ எம்.எல்.ஏ.க்களே பதவி விலக வலியுறுத்தி வந்த நிலையில் கடந்த 9ம் தேதி அவர் டில்லி வந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பிறகு மீண்டும் மணிப்பூர் சென்று கவர்னர் அஜய்குமார் பல்லாவைச் சந்தித்து பதவி விலகல் கடிதம் கொடுத்தார். புதிய அரசு அமைக்க யாரும் உரிமை கோர முன்வரவில்லை. பாஜ தரப்பில் புதிய முதல்வர் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளும் நடக்கவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ல் மணிப்பூர் சட்ட சபை ஒத்திவைக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்குள் சட்ட சபை நேற்று மீண்டும் கூட்டப்பட்டிருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. இதனால் கவர்னரின் பரிந்துரையை ஏற்று மணிப்பூரில் இன்று ஜனாதிபதி ஆட்சி அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது. சட்டசபை பதவிக்காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ளன.