வடகொரியாவுக்கு அடிக்கடி ரஷ்யா பரிசு: மர்மம் என்ன | Russia | Putin | North Korea | kim jong un
ரஷ்யாவும், வடகொரியாவும் சமீப காலமாக தங்களது நட்புறவை பலப்படுத்தி வருகின்றன. ரஷ்ய அதிபர் புடின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அடிக்கடி பரிசுகள் வழங்கி நட்பை புதுப்பித்து வருகின்றார். வடகொரியாவின் பியோங்யானில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அதிபர் புடின் விலங்குகளை பரிசாக அளித்துள்ளார். ஆப்ரிக்க சிங்கம், 2 பழுப்பு நிற கரடிகள், வாத்துகள் உட்பட 70க்கு மேற்பட்ட விலங்குகள் விமானம் மூலம் வடகொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவை, வடகொரியா மக்களுக்கான புடின் பரிசு என ரஷ்யா அரசு கூறியுள்ளது. வடகொரியா உயிரியல் பூங்காவுக்கு விலங்குகளை புடின் அன்பளிப்பு அளிப்பது முதல் முறையல்ல. கடந்த ஏப்ரல் மாதத்தில் கழுகுகள், கொக்குகள், கிளிகள் உள்ளிட்ட பறவைகளை வழங்கினார். கடந்த ஜூனில் வடகொரியாவுக்கு சென்று இருந்த ரஷ்ய அதிபர் புடின், ரஷ்ய தயாரிப்பான ஆரஸ் லிமோசின் காரை அதிபர் கிம்முக்கு பரிசு அளித்தார். அந்த காரை இருவரும் மாறி மாறி ஓட்டி சென்றனர். இந்த பயணத்தின்போது, புடினுக்கு ஒரு ஜோடி புங்சன் நாய்களை கிம் பரிசளித்தார். இந்த சந்திப்பின்போது, ராணுவம் தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளில் போரை எதிர்கொள்வோருக்கு, கிடைக்கும் வழிகளை பயன்படுத்தி ராணுவம் மற்றும் பிற உதவிகள் வழங்க வேண்டும். ஏற்கனவே ரஷ்ய படையில் ஆயிரக்காண வடகொரிய ராணுவத்தினர் உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். போருக்காக வெளிநாட்டுக்கு தமது படைகளை வடகொரியா அனுப்பியது இதுவே முதல்முறை. இந்த சூழ்நிலையில்தான் வடகொரியாவுக்கு ரஷ்யா பரிசுகள் வழங்கி நட்பை உயிர்ப்புடன் வைத்து இருக்கிறது.