ஆயுதங்கள், நகை, பணத்துடன் கொள்ளை கும்பல் கைது! | Crime | Robbery gang | Robbery gang Arrest | Virudh
விருதுநகர் வஉசி தெருவை சேர்ந்தவர் நாகராணி வயது 48. அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை பைக்கில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். சங்கரலிங்காபுரம் சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்த போது காரில் வந்த 3 பேர் நாகராணியை வழிமறித்தனர். முகமூடி அணிந்தபடி இறங்கிய அவர்கள் கத்தி முனையில் நாகராணியை மிரட்டினர். அவர் அணிந்திருந்த தாலியுடன் கூடிய 6 சவரன் செயின், 2 செல்போன், 1,500 பணத்துடன் கைப்பையையும் பறித்து சென்றனர். நாகராணி போலீசில் புகார் கொடுத்தார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கார் சென்ற பகுதிகளை போலீசார் ஆய்வு செய்தனர். வழிப்பறி கும்பல் குமரி, நெல்லை சென்று விட்டு மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி வழியாக தப்பிச் செல்வது தெரிய வந்தது. விருதுநகர் டிஎஸ்பி யோகேஷ் குமார் தலைமையிலான போலீசார் 3 பேர் கும்பலை திரைப்பட பாணியில விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். விருதுநகர் அழைத்து வந்து விசாரித்ததில் நெல்லையை சேர்ந்த சுரேஷ் ,சேலம் அஜித் குமார், திருச்சி பால குமார் என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் பல கொள்ளை வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த போது மூவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். காரை சோதனை செய்ததில் அரிவாள், கத்தி சிறிய வகையிலான கடப்பாரை, ஆறு சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்து 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு பாராட்டு குவிகிறது.