மீண்டும் அமெரிக்க நிறுவனத்தை நுழைக்க டிரம்ப் முயற்சி! | Sakhalin-1 | Russia's Sakhalin | USA
ரஷ்யாவின் சகலின் - 1 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டம் ஒரு சர்வதேச முதலீட்டு திட்டம். இதில் அமெரிக்க நிறுவனமான எக்ஸான் மொபில் 30, ஜப்பானின் சோடெகோ 30, இந்தியாவின் ஓ.என்.ஜி.சி., விதேஷ் மற்றும் ரஷ்யாவின் ரோஸ்னெப்ட் 20 சதவீத பங்குகளை வைத்திருந்தன. உக்ரைன் மீது ரஷ்யா 2022ல் போர் துவக்கியதால், அமெரிக்க நிறுவனமான எக்ஸான் மொபில் பங்குகளை விற்று வெளியேறியது. இந்தியா மற்றும் ஜப்பான் பங்குகளை தக்க வைத்துக்கொண்டன. இந்த திட்டத்தை, ரஷ்யாவின் ரோஸ்னெப்ட் நிர்வகிக்கிறது. நாளொன்றுக்கு 2 லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இப்போது உக்ரைனுடன் ரஷ்யா அமைதி ஒப்பந்தம் எட்டுவதை ஊக்குவிக்க, சகலின் - 1 திட்டத்தில் மீண்டும் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் நிறுவனமான எக்ஸான் மொபிலை நுழைக்க முயற்சி நடந்து வருகிறது. இதற்காக, அத்திட்டத்தை நிர்வகிக்கும் ரஷ்யாவின் ரோஸ்னெப்ட் நிறுவன அதிகாரிகளுடன் எக்ஸான் மொபில் நிறுவன அதிகாரிகள் பலமுறை பேச்சு நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்காக கச்சா எண்ணெய் வாங்கும் நம் நாட்டை, உலக அரங்கில் டிரம்ப் குற்றம் சாட்டுகிறார். கூடுதல் வரியும் விதித்துள்ள அவர், சத்தமின்றி இந்த மறைமுக வேலையிலும் ஈடுபட்டு வருகிறார்.