ஊழல் குற்றச்சாட்டில் சிங்கப்பூர் கோர்ட் தீர்ப்பு Eswaran | Singapore| Ex Minister | Corruption
சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் 62 வயதான ஈஸ்வரனுக்கு ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் செட்டில் ஆனவர். ஆளுங்கட்சியான பீப்பிள்ஸ் ஆக்ஷன்(Peoples actions) கட்சியை சேர்ந்த ஈஸ்வரன், 1997ல் முதல் முறையாக எம்.பி ஆனார். அதன் பிறகு சிங்கப்பூர் லோக்சபா துணை சபாநாயகராக பதவி வகித்தார். 2018-21 இடைப்பட்ட காலத்தில் தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் வர்த்தக உறவு துறை அமைச்சராக இருந்தார். அமைச்சராக இருந்த காலத்தில் பார்முலா ஒன் கார் பந்தயம் நடத்தினார். இதற்காக, தொழில் அதிபர்களிடம் 40 லட்சம் சிங்கப்பூர் டாலர் மதிப்புள்ள பரிசு பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல், ரயில் நிலைய கட்டுமான பணிகளுக்காக மற்றொரு தொழில் அதிபரிடம் பரிசு பொருள்களை லஞ்சமாக பெற்றதாகவும் புகார் எழுந்தது. கடந்தாண்டு ஜூலையில் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டார். கட்சி மற்றும் அரசு பதவிகளை இழந்தார். அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. சிங்கப்பூர் ஐகோர்ட் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. சிங்கப்பூர் வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகளில் அரசியல்வாதி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவது இதுவே முதல் முறை.