டாக்டருக்கு பாலியல் தொல்லை: சிவகங்கை இளைஞர் கைது Sivagangai medical College hospital trainy doctor y
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் 600 மாணவ. மாணவிகள் படிக்கின்றனர். மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரவு பயிற்சி முடித்து விட்டு ஹாஸ்டலுக்கு பெண் பயிற்சி டாக்டர் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி துணியை டாக்டர் முகத்தில் போட்டு மூடினார். பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது. பெண் டாக்டர் சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டார். மருத்துவமனை ஊழியர்கள் ஓடி வந்தனர். உடனே மர்ம ஆசாமி தப்பிஒடி விட்டான். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். பெண் டாக்டரிடம் விசாரணை நடத்தினார். சிசிடிவி வீடியோ அடிப்படையில் தனிப்படை அமைத்து மர்ம ஆசாமியை போலீசார் தேடி வந்தனர் . இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் போதிய விளக்குகளோ, கண்காணிப்பு கேமராக்களோ இல்லை. இதனால் மருத்துவ மாணவிகள் மற்றும் பயிற்சி டாக்டர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் பயிற்சி டாக்டர் மீது பாலியல் தாக்குதல் நடத்தியதாக சிவகங்கை ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் சந்தோஷ் வயது 20 என்ற வாலிபரை போலீசார்கைது செய்தனர். சந்தோஷிடம் விசாரணை நடத்தினர். சந்தோஷின் உறவினர் உடல்நலம் இன்றி மருத்துவமனையில் அட்மிட்செய்யப்பட்டுள்ளார். அவரை பார்க்க சந்தோஷ் தொடர்ந்து வந்துள்ளார். கடந்த 2 நாளாக பெண் டாக்டரை பார்த்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்நேரம் பெண் பயிற்சி டாக்டர் தனியாக நடந்து செல்வதை பார்த்தார். பின்னாலேயே சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என தெரிய வந்துள்ளது. சந்தோஷ் வாக்குமூலத்தை பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்