உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் வசிக்க சட்டபூர்வ அனுமதி | Sri Lankan Tamil Refugees

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவில் வசிக்க சட்டபூர்வ அனுமதி | Sri Lankan Tamil Refugees

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 இந்தியாவில் செப்டம்பர் 1ம் தேதி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன் இருந்த நான்கு சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு அவற்றின் அம்சங்கள் புதிய சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் படி, போலி பாஸ்போர்ட், விசா அல்லது தவறான பயண ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்குள் நுழைபவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். சரியான பயண ஆவணங்கள் இல்லாமல் நுழைபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை மற்றும் 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம். ஹோட்டல்கள், பல்கலைக்கழகங்கள், பிற கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் ஆகியவை தங்கள் வளாகத்தில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் பற்றிய தகவல்களை அரசாங்கத்திற்குத் தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது வெளிநாட்டினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவும். சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டால், அவர்கள் நாடு கடத்தப்படும் வரை தடுப்பு மையங்கள் அல்லது முகாம்களில் வைக்கப்படுவார்கள். குற்றப் பின்னணி உள்ள அல்லது தேச விரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். பயோமெட்ரிக் தரவுகள் மற்றும் பிற தகவல்களை வழங்குவதன் மூலம் மட்டுமே இந்தியாவுக்குள் நுழைய பயண அனுமதி பெற முடியும். சீனா, பாகிஸ்தான், மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சில வெளிநாட்டினர், இந்தியாவின் குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை. இதில் அருணாச்சல பிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் மற்றும் சில பகுதிகள் அடங்கும். நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டின் குடிமக்கள் பாஸ்போர்ட் அல்லது விசா இல்லாமல் இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் செல்லுபடியாகும் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல் காரணமாக டிசம்பர் 31, 2024க்கு முன் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் இந்து, சீக்கிய, பௌத்த, சமண, பார்சி மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு விசா மற்றும் பாஸ்போர்ட் தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய திருப்பமாக 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன் இந்தியாவிற்கு வந்து அரசிடம் பதிவு செய்த இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவிலேயே தங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் புதிய குடியேற்ற சட்டப்படி சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள். சரியான பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் தங்கி இருந்தாலும் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது. அதே சமயம் 2015 ஜனவரி 9க்கு பிறகு வந்த இலங்கை தமிழர்கள் வழக்கமாக விதிகளை பின்பற்ற வேண்டும். அவர்களுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படாது என்பதையும் மத்திய உள்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசின் அரசின் வெளிநாட்டு தமிழர்கள் மறுவாழ்வு துறை தகவல்படி, 58,843 இலங்கை தமிழ் அகதிகள் 108 முகாம்களில் தங்கியுள்ளனர். 34,135 இலங்கை தமிழ் அகதிகள் அரசிடம் பதிவு செய்துவிட்டு முகாம்களுக்கு வெளியே தங்கி உள்ளனர். இதைதவிர 54 இலங்கை தமிழ் அகதிகள் ஒடிசாவின் மல்கங்கிரியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். புதிய சட்டத்தின் மூலம் இவர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #SriLankanTamilRefugees #India #MHA #RefugeeRights #Citizenship #HumanitarianExemption #TamilNadu #RefugeePolicy #HomeAffairs

செப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை