இலங்கை கிரிக்கெட் அணி பயிற்சியாளருக்கு மோடி அளித்த வாக்குறுதி Srilankan Cricket team met Modi| Jaya
இலங்கை சென்று இருந்த பிரதமர் மோடியை, 1996ல் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியினர் சந்தித்தனர். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் மோடியிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இலங்கை வீரர்களின் விளையாட்டு மீதான ஆர்வத்தை பிரதமர் மோடி பாராட்டினார். அப்போது, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், தற்போதைய பயிற்சியாளருமான சனத் ஜெயசூர்யா, பிரதமர் மோடியிடம் ஒரு கோரிக்கை வைத்தார். இலங்கை இக்கட்டான சூழலை சந்தித்தபோதெல்லாம் இந்தியா எங்களுக்கு துணை நின்றுள்ளது. சில நாட்களுக்கு முன் கூட இங்கு ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியின் போது, இலங்கைக்கு நிறைய உதவி செய்தீர்கள். பெட்ரோல், டீசல் கொடுத்து உதவியதுடன், இருளில் சூழந்த இலங்கையில் மீண்டும் வெளிச்சம் வர துணை நின்றீர்கள். இந்தியாவின் உதவியை எப்போதும் மறக்க மாட்டோம். இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் என்ற முறையில் ஒரு கோரிக்கை வைக்க விரும்புகிறேன். நாங்கள் இலங்கையின் பல பகுதிகளில் கிரிக்கெட் விளையாடுகிறோம். பல இடங்களில் சர்வதேச போட்டிகள் நடந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்தியா உதவ வேண்டும். அங்கு சர்வதேச கிரிக்கெட் நடக்காதது வருத்தம் அளிக்கிறது. அங்கும் கிரிக்கெட் போட்டிகள் நடந்தால், மன நிறைவு பெறும். அதன் மூலம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மக்கள் நாட்டின் பிற பகுதிகளுடனான நெருக்கம் அதிகரிக்கும் என ஜெயசூர்யா கோரிக்கை விடுத்தார். ஜெயசூர்யா கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய மோடி, அதற்கு பிரதமர் மோடி, இந்தியா எப்போதும் அண்டை நாடுகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் நாடு. தற்போது மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது கூட, முதல் நாடாக உதவிக்கு நின்றோம். அந்த வகையில் இலங்கையின் நலனில் நாங்கள் எப்போதும் அக்கறை செலுத்தி வருகிறோம். இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என விரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில், எங்கள் குழுவுடன் இணைந்து ஆலோசிக்கிறேன். எங்களால் என்ன செய்ய முடியும் என்பதை விவாதிக்கிறேன். எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்வோம் என பிரதமர் மோடி உறுதி அளித்தார்.