நேர்மை அதிகாரி பதவி பறிப்பு: சட்டவிரோத மது விற்பனை ஜோர் sundaresan dsp suspended mayiladuthurai
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக இருந்தவர் சுந்தரேசன். கடந்த ஆண்டு நவம்பரில் அவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்கும் பார்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்தார். கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்களையும் விரட்டி விரட்டி பிடித்தார். மயிலாடுதுறை பகுதியில் சட்டவிரோதமாக செயல்பட்ட 23 பார்களை பூட்டி சீல் வைத்தார். சட்டவிரோதமாக பார் நடத்தியது, மதுவிற்றது, கள்ளச்சாராயம் கடத்தியது, விற்றதுஎன 1000க்கு மேற்பட்ட வழக்குகளை பதிவு செய்து 700க்கு மேற்பட்டவர்களை பிடித்து ஜெயிலில் தள்ளினார். சட்டவிரோதமாக மதுவிற்ற அரசியல் தொடர்புடைய சிலருக்கு சுந்தரேசன் சிம்மசொப்பனமாக இருந்தார். இதனால், சுந்தரேசனை டிரான்ஸ்பர் செய்ய அழுத்தம் வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், அவரது ஜீப்பை மேலதிகாரிகள் பிடுங்கிக் கொண்டனர். முதல்வர் ஸ்டாலின் மயிலாடுதுறை வரும்போது கான்வாய்க்காக தேவைப்படுகிறது என காரணம் கூறியுள்ளனர். இது,பழிவாங்கும் நடவடிக்கை என்பதை உணர்ந்த சுந்தரேசன் வீட்டிலிருந்து அமலாக்கப்பிரிவு அலுவலகத்துக்கு நடந்தே சென்றார். இது மீடியாக்களில் பரபரப்பு செய்தியாக, அரசின் பழிவாங்கும் நடவடிக்ககை்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். தன்னை பழிவாங்குவதாக, மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின், போலீஸ் உயரதிகாரிகள் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், செந்தில்வேல் ஆகியோர் மீது சுந்தரேசன் பரபரப்பு புகார் கூறினார். முன்பிருந்த போலீஸ் அதிகாரிகளைப்போல உயரதிகாரிகளுக்கு கப்பம் கொடுக்காத காரணத்தால்தான் தான் பழிவாங்கப்படுவதாகவும் பகீர் குற்றச்சாட்டை கிளப்பினார். மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததை சுட்டிக் காட்டி, சுந்தரேசனை நேற்று முன்தினம் தமிழக உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்தார். இந்நிலையில், மயிலாடுதுறை சித்தர்காடை ஒட்டிய காவிரிக்கரை பகுதியில் பூட்டி கிடந்த சட்டவிரோத பார், சுந்தரேசன் சஸ்பெண்ட் ஆன மறுநாளே திறக்கப்பட்டு விட்டது. காலை 6 மணிமுதலே அங்கு சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்கப்படுகிறது. டாஸ்மாக்கில் இருந்து மொத்தமாக மதுபாட்டில்களை வாங்கி வந்து இங்கு விற்கப்படுகிறது. இதற்கு, டாஸ்மாக்கில் வேலை பார்க்கும் அதிகாரிகள் சிலரே உடந்தையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆளுங்கட்சியினருக்கும் இதில் பங்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டவிரோத பார் செயல்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவுகிறது நேர்மையான அதிகாரி சுந்தரேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் சட்டவிரோத பார் நடத்தும் ஆசாமிகளுக்கு குளிர் விட்டுப் போய் விட்டது என நெட்டிசன்கள் பதிவிடுகின்றனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். டிஎஸ்பி சுந்தரேசன் சஸ்பெண்ட் ஆனவுடனே இப்படிஎன்றால், வரும் நாட்களில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சட்டவிரோத பார்கள் அதிகரிப்பது உறுதி; கூடவே சட்டவிரோத செயல்களும் அதிகரித்து விடும் என மயிலாடுதுறை மக்களும் கவலையுடன் பேசிக் கொள்கின்றனர்.