இலங்கை, வ.தேசம்போல சிரியா அதிபர் மாளிகை சூறை | Syria president | Palace Bashar al-Assad Syrians
2011ம் ஆண்டு முதல் சிரியாவில் நடந்த உள்நாட்டு போரில் கிளர்ச்சியாளர்களுக்கு நேற்று வெற்றி கிடைத்தது. Hayat Tahrir Al-Sham ஹயாத் தஹ்ரீர் அல்ஷாம் எனும் இஸ்லாமிய கிளர்ச்சிப்படையினர் தலைநகர் டமாஸ்கசுக்குள் நுழைந்து நாட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்கு முன் அதிபர் பஷர் அல் ஆசாத் குடும்பத்துடன் தப்பி ஓடினார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் டமாஸ்கஸ் நகரிலுள்ள பிரமாண்ட அதிபர் மாளிகைக்குள் மக்கள் புகுந்தனர். 31,500- சதுர மீட்டரில் அமைந்துள்ள அதிபர் மாளிகையில் உள்ள ஒவ்வொரு அறையாக மக்கள் சென்றனர். ஆசாத் மற்றும் குடும்பத்தினரின் போட்டோக்களை அடித்து நொறுக்கினர். கோபத்தில் சில அறைகளை தீவைத்து கொளுத்தினர். அதிபர் மற்றும் குடும்பத்தினரின் படுக்கை அறைகளுக்குள் சென்ற மக்கள், நகைகள், விலை உயர்ந்த பொருட்கள், சேர்கள், பர்னிச்சர் பொருட்கள், பாத்திரங்களை எடுத்துச் சென்றனர். கைப்பைகள், துணிகளையும் அள்ளிக் கொண்டனர். அதிபரின் அலுவலகத்தில் நுழைந்த ஒரு கிளர்ச்சியாளர், அதிபர் சேரில் உட்கார்ந்து போஸ் கொடுத்தார். அதிபர் மாளிகை மக்கள் மாளிகையாகி விட்டது என சிலர் சத்தம் போட்டு கத்தினர். தோட்டத்திலும் ஜாலியாக சுற்றித் திரிந்த பெண்கள், குழந்தைகள் விதவிதமாக செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பார்க்கிங் பகுதிக்கு சென்றனர். அங்கு மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட பலவிதமான ஆடம்பர கார்களை பார்த்து வியந்தனர். எல்லா கார்களையும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு ஓட்டிச் சென்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.