சென்னையில் 1556kg அழுகிய கறியால் பூகம்பம்| Tamil Nadu express | food safety raid |1556 kg meat
சென்னை ரயிலில் பெட்டி பெட்டியா வந்திறங்கிய அழுகிய கறி லோடு! அசைவ பிரியர்களுக்கு அதிர்ச்சி சென்னையில் தள்ளு வண்டி கடையாக இருந்தாலும் சரி; பெரிய பெரிய ஓட்டலாக இருந்தாலும் சரி, அசைவ உணவு விற்பனை சக்கைப்போடு போடுகிறது. பல விதமான மசாலா ஐட்டம் சேர்த்து மட்டன், சிக்கன் கறியை கலர் கலராகவும், டிசைன் டிசைனாகவும் சமைத்து தருகின்றனர். அசைவப் பிரியர்களும் நாக்கில் எச்சீல் ஊற ருசித்து சாப்பிடுகின்றனர். சூப்பர் மார்க்கெட், பெரிய பெரிய மால்கள் மட்டும் இன்றி துணி கடைக்கு போனால் கூட அங்கும் புட் கோட் வைத்திருக்கின்றனர். இப்படி தள்ளு வண்டி முதல் பெரிய ஓட்டல் வரை கிடைக்கும் அசைவ உணவுகள் சுவையில் அலாதியானதாக இருக்கலாம். ஆனால் உண்மையில் தரமான மாமிசத்தில் தான் சமைக்கிறார்களா என்றால், சந்தேகம் தான் என்று சொல்லும் அளவுக்கு சென்னையில் மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. அப்படி என்ன நடந்தது என்பதை பார்க்கலாம். டில்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு இன்று காலையில் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அதில் இருந்து பெட்டிப்பெட்டியாக பார்சல் இறங்கியது. எல்லாம் தெர்மாகோலில் தயாரான பெட்டிகள். பார்சல் ஆபீசில் இறக்கி வைத்த பெட்டிகளை திடீரென உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பார்வையிட்டனர். பெட்டிகளில் இருந்து கெட்ட வாடை வீசியது. ஒவ்வொரு பெட்டியாக திறந்தனர். பெட்டிகளில் நிரம்ப நிரம்ப ஆட்டு இறைச்சி இருந்தது. சில பெட்டிகளில் கோழி இறைச்சியும் இருந்தது. மொத்தம் 1,556 கிலோ கறி இருந்தது. எல்லாம் கெட்டுப்போன இறைச்சி. கொஞ்சம் கூட தரமானது இல்லை. கறி வெட்டி 3 நாட்களுக்கு மேல் இருக்கும். கிட்டத்தட்ட அழுகும் நிலையில் இருந்தது. சில வகை கறிகளில் மசாலா தடவி ரெடிமேட் ஐட்டம் போல் தயார் செய்து வைத்திருந்தனர். குறிப்பாக மட்டன், சிக்கனில் கபாப் செய்வதற்கான ரெடிமேட் கறியும் இருந்தது. எதுவும் ஃப்ரஷானது இல்லை. எல்லாம் பழைய கறி தான்.