கோயில் பெண் அதிகாரியிடம் பொங்கிய கிளார்க்: பரபரப்பு தகவல் thiruvarur pongu saneeswaran temple EO j
திருவாரூர் மாவட்டம் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் செயல் அலுவலராக பணிபுரிபவர் ஜோதி, 42. இதே கோயிலில் கிளார்க் ஆக சசிகுமார், 49, என்பவர் பணிபுரிந்து வருகிறார். சசிகுமுாருக்கு 2015 ஆம் ஆண்டு பதவி உயர்வு கிடைத்தது. அதற்கான ஊதிய உயர்வு நிலுவைத்தொகை வந்து சேரவில்லை. இந்து அறநிலையத்துறையில் இருந்து 2 லட்ச ரூபாய் ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை பெற்று தரும்படி செயல் அலுவலர் ஜோதியிடம் மனு கொடுத்தார். அதற்கு அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். தருவதாக சசிகுமார் ஒப்புக் கொண்டார். ஆனால், ஒரு லட்ச ரூபாயை உனக்கு லஞ்சமா கொடுக்கணுமா ? என பொங்கிய சசிகுமார், திருவாரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு சென்று நடந்ததை சொன்னார். புகார் மனு கொடுத்தார். அவர் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளில் போலீசார் ரசாயன பவுடர் தடவி கொடுத்தனர். மன்னார்குடியில் உள்ள ஆதி விநாயகர் கோயிலில் ஜோதி இன்று ஆய்வு செய்து கொண்டிருந்தார். அப்போது, சசிகுமார் ரசாயனம் தடவிய 1 லட்ச ரூபாயை ஜோதியிடம் கொடுத்துள்ளார். அதை ஜோதி வாங்கியபோது, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி நந்தகோபால் தலைமையிலான போலீசார் ஜோதியை கையும் களவுமாக கைது செய்தனர்.