வீடியோவை பகிர்ந்து ஜெகன் ஆட்சி மீது தெலுங்குதேசம் குற்றச்சாட்டுTirupati temple|₹100 crore stolen
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில், திருமலை பெரிய ஜீயர் மடத்தை சேர்ந்த ரவிக்கும் என்பவர் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். கடந்த 2023 ஏப்ரலில், பராகாமணி என்ற இடத்தில் உண்டியல் பணம் எண்ணும்போது, 112 அமெரிக்க டாலர்களை திருடி சென்றார். ஆனால், விஜிலன்ஸ் அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டார். இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக, ரவிக்குமாரும், அவரது குடும்பத்தினரும், திருப்பதி மற்றும் சென்னையில் தங்களுக்கு சொந்தமான சுமார் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை தேவஸ்தானத்திற்கு எழுதி கொடுத்துள்ளனர். அதன் சந்தை மதிப்பு 100 கோடி என கூறப்படுகிறது. இதையடுத்து, இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டதாக லோக் அதாலத்தில் தேவஸ்தான அதிகாரிகள் கூறியதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ரவிக்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். ஆனால், தங்கம், வைரம், வெளிநாட்டு டாலர்கள் என 100 கோடி ரூபாய் வரை ரவிக்குமார் பல கட்டங்களாக திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல், கட்டப் பஞ்சாயத்து செய்வது போல், சொத்துகளை எழுதி வாங்கிவிட்டு விஷயத்தை அமுக்கிவிட்டதாகவும், அதிகாரிகள் சிலர் ரவிக்குமாரை மிரட்டி தங்கள் உறவிர்கள் பெயரில் சில சொத்துகளை வாங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இச்சூழலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். அவர்களில் பாஜவை சேர்ந்த பானு பிரகாஷ், கடந்த ஆட்சியில் நடந்த உண்டியல் காணிக்கை திருட்டு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.