அரசு பணி தேர்வா? அரசியல் கட்சி தேர்வா? | TNPSC Exam | DMK
டி.என்.பி.எஸ்.சி. சார்பில் 1,033 அரசு பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பொது அறிவு தேர்வு ஞாயிறன்று நடந்தது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கூற்றும் காரணமும் என்ற வகை கேள்வியில் ஒரு கூற்றை சொல்லி, அதற்கான காரணம் சரியா என கேட்கப்படும். அதில் அரசு பள்ளிகளில் இந்தி திணிப்பை, தமிழகம் நீண்ட காலமாக எதிர்த்து வருகிறது. மத்திய அரசு சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இது கூட்டாட்சி நிர்வாக முறை என்ற கருத்திற்கு எதிரானதாக கருதப்பட்டு தமிழக அரசால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது என நான்கு விடைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வினா ஆளும் திமுக அரசின் கொள்கை சார்ந்தது என தேர்வர்கள் கூறுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி நடத்தும் போட்டி தேர்வுகளில் திமுக குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் கேட்கப்படும் கேள்விகள் அதிகம் உள்ளன. பொது அறிவு தொடர்பான வினாக்களில், அரசியல் கட்சியின் கொள்கை சார்ந்த முடிவுகள் குறித்து கேட்பது எந்த வகையில் நியாயம்? இதில் பலருக்கு பலவிதமான கருத்துகள் இருக்கும். அவரவருக்கு அவர்களின் கருத்து நியாயமானதாக இருக்கும். இதற்கு எப்படி பதில் அளிக்க முடியும். தங்களின் கொள்கைக்கு உட்பட்டு பதில் அளித்தால், தேர்வாணையம் அதை தவறு என சுட்டிக்காட்டும். எனவே திட்டங்கள் தொடர்பான கேள்விகள் கேட்கலாம்; ஆனால், கட்சி, அரசியல் கொள்கை சார்ந்த கேள்விகளை டி.என்.பி.எஸ்.சி. தவிர்க்க வேண்டும் என வருத்தம் தெரிவித்து உள்ளனர்.