அதிபர்கள் டிரம்ப், புடின் போனில் பேசியது என்ன? Russia |will respond |Ukraine attack |Trump - Putin
ரஷ்யா - உக்ரைன் நாடுகளிடையே 3 ஆண்டுகளாக போர் தொடர்கிறது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. அமைதி பேச்சுகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும், இரு நாடுகளும் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சுமார் ஒன்றேகால் மணிநேரம் போனில் பேசியுள்ளார். அது பற்றி அதிபர் டிரம்ப் கூறியதாவது ரஷ்யா விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் குறித்து விவாதித்தோம். ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகளும் நடத்திய பல தாக்குதல்கள் குறித்தும் பேசினோம். இது ஒரு நல்ல பேச்சுதான். ஆனால், உடனடியாக அமைதிக்கு வழிவகுக்கும் பேச்சு கிடையாது. ரஷ்ய விமான தளங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தந்தே ஆக வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் உறுதிபட கூறினார். அணு ஆயுதங்கள் தொடர்பான ஈரான் முடிவு குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது என நான் அதிபர் புடினிடம் கூறினேன். அந்தக் கருத்தில் நாங்கள் இருவரும் உடன்பட்டோம் என்றே நம்புகிறேன். இந்த விஷயம் குறித்து ஈரானுடன் பேசுவேன் என்று புடின் கூறினார். பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர ஒருவேளை அது உதவக்கூடும் என்றும் அவர் சொன்னார். இந்த முக்கியமான விஷயத்தில் ஈரான் மிகவும் மெதுவாக செயல்படுகிறது இதில் எங்களுக்கு ஒரு நிச்சயமான முடிவு தேவை என டிரம்ப் கூறினார்.