இந்திய தூதராக பெரிய கையை டிரம்ப் அனுப்பும் பின்னணி US vs India|Sergio Gor US ambassador for india
தனது முதல் பதவிக் காலத்தில் இந்தியாவுடன் நெருக்கம் காட்டி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், 2வது முறை பதவிக்கு வந்த பிறகு முற்றிலும் மாறி விட்டார். வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி இந்தியாவுக்கு 25 சதவீதம் பரஸ்பர வரி போட்டார். அடுத்த சில நாட்களில் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, அடாவடியாக 25 சதவீதம் அபராத வரி விதித்தார். 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தனக்கு மிகவும் நெருக்கமான ஒருவரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்து இருப்பது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 2023 முதல் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக் கார்செட்டி என்பவர் இருந்தார். டிரம்ப் 2வது முறை அதிபரான பிறகு அவர் நீக்கப்பட்டார். அதன் பிறகு இந்தியாவுக்கா தூதர் பணியிடம் காலியாகவே இருந்தது. இந்த நிலையில் தான் செர்ஜியோ கோர் என்பவரை இந்தியாவுக்கான தூதராக டிரம்ப் நியமித்துள்ளார். அதுமட்டும் அல்ல, தெற்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதராகவும் அவர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவுக்கான தூதராகவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்பு தூதராகவும் செர்ஜியோ கோரை நியமித்துள்ளேன். வெள்ளை மாளிகை இயக்குனராக இருக்கும் செர்ஜியோவும் அவரது டீமும் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில், அரசாங்கத்தில் 4000 முக்கிய அதிகாரிகளை நியமனம் செய்தனர். அவரது நியமனத்தை செனட் சபை உறுதி செய்யும் வரை அவர் இப்போதிருக்கும் பதவியில் தொடர்வார்.