வாணியம்பாடி அருகே கிடைத்த 700 ஆண்டுகால அரிதான நடுகல் | 700 Years old middle stone found
கண்ணப்பநாயனார் வரலாற்று சிற்பம் நிறைந்த அதிசய நடுகல் தமிழகத்தில் முதல்முறை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றியுள்ள பகுதிகளில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு தலைமையில் ஆர்வலர்கள் சிலர் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். திம்மாம்பேட்டை அருகே உள்ள அலசந்தாபுரத்தில் சந்திரசேகரன் என்பவரின் தென்னந்தோப்பில் விசித்திரமான ஒரு நடுகல் இருப்பதாக தகவல் கிடைத்தது. பேராசிரியர் குழுவினர் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, அந்த நடுகல் 700 ஆண்டுகளுக்கு முந்தய 14-ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்கால நடுகல் என்பது தெரிந்தது. 7 அடி உயரம், 6 அடி அகலத்தில் உள்ள அந்த நடுகல்லின் மையப்பகுதியில் வீரனின் உருவமும், அவனோடு போரிட்ட எதிரியின் உருவமும் காணப்படுகிறது. வீரன் தனது வலது கையில் கொடுவாளும், இடது கையில் ஈட்டியும் வைத்து கொண்டு எதிரியை தாக்குவது போல் உள்ளது. வீரனின் இடையில் உடைவாளும், கழுத்தில் ஆபரணங்களும் காணப்படுகின்றன. எதிராளியின் கையில் வில்லும், அம்பும் காணப்படுகிறது. போர்க்களத்தில் வீரமரணம் அடைந்த வீரனுக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்றும் கூறப்படுகிறது. அதில் மொத்தமாக 11 மனித உருவங்களும், ஒரு குதிரை, 2 சிவலிங்கம் செதுக்கப்பட்டு உள்ளது. நடுகல்லின் இடதுபுறம் ஒரு பெண் இசைக்கருவியினை சுமந்த நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் கள குடுவையினை ஏந்திய நிலையிலும், அதற்கு மேல் ஒரு பெண் வீரனுக்குச் சாமரம் வீசுவதும், அதற்கு மேல் வீரனின் குதிரையும் இடம்பெற்றுள்ளது. நடுகல்லின் மேல்புறம் இறந்த வீரனை நான்கு பெண்கள் தேவலோகம் அழைத்துச் செல்லும் காட்சியும், அதற்கு அருகே ஒரு பெண் சிவலிங்கத்திற்கு நீராட்டும் காட்சியும் உள்ளது.