விசாரணைக்கு தமிழகம் வரும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் | youth congress leader | attacked | complaint to
புதிய இளைஞர் காங். தலைவர் முகத்தில் குத்து விட்ட நிர்வாகி காங். கட்சிக்குள் சலசலப்பு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக 28 வயது சூர்ய பிரகாஷ் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். தேர்தலில் இவரை விட குறைந்த ஓட்டுகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் வந்த அருண் பாஸ்கர், தினேஷ் ஆகியோர் துணை தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவரும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகத்தில் மூத்தவர்கள் என்பதால், தங்களை விட குறைந்த வயது கொண்ட சூர்ய பிரகாஷ் தலைமையை ஏற்கவில்லை. இந்த சூழலில் சென்னையில் சக்தி அபியான் என்ற அமைப்பு சார்பில், பெண்களுக்கான தலைமை பண்பு குறித்த மாநில மாநாடு நடந்தது. இதில் பங்கேற்க வந்த இளைஞர் காங்கிரஸ் தேசிய தலைவர் உதய்பானுவுக்கு சூர்ய பிரகாஷ் தலைமையில், இளைஞர் காங்கிரசார் வரவேற்பு அளித்தனர். மாநாடு முடிந்து உதய்பானு டில்லி செல்வதற்கு முன், அகில இந்திய காங்கிரஸ் இளைஞர் அணி செயலரும், புதுச்சேரி மேலிட பொறுப்பாளருமான ஜோஸ்வா, தன் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்க அழைத்தார். ஆனால், உதய்பானு விருந்துக்கு செல்லாமல், ஏர்போர்ட் சென்று விட்டார். அவரை சூர்ய பிரகாஷ் வழி அனுப்பி வைத்துள்ளார். ஜோஸ்வா வீட்டிற்கு உதய்பானு வராததால் அதிருப்தி அடைந்த, ஜவஹர் பால் மன்ச் அமைப்பின் தேசிய நிர்வாகி ஒருவர், சூர்ய பிரகாஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார் வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர், சூர்ய பிரகாஷ் முகத்தில் குத்து விட்டுள்ளார்.