ஒரு நாள் தொடரின் முதல் போட்டியை கைப்பற்றிய இந்திய அணி | First odi | India won | England team
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. அடுத்ததாக இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வியாழனன்று நடந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, ஜெய்ஸ்வால் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். மூட்டு வலி காரணமாக விராட் கோலி அணியில் இடம்பெறவில்லை. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பில் சால்ட் நிதானமாக விளையாடி 43 ரன் எடுத்தார். அடுத்து வந்த பென் டக்கெட் 32 ரன் சேர்த்து அவுட் ஆனார். அதிகபட்சமாக பட்லர் 52 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 51 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா, ஹர்ஷித் ராணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 249 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 15 ரன்னிலும், ரோகித் சர்மா 2 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பிறகு கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயர் - சுப்மன் கில் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டதுடன் வெற்றி பாதைக்கும் அழைத்து சென்றனர். சுப்மன் கில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 30 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய அக்சர் படேலும் அதிரடியாக விளையாடினார். சுப்மன் கில் அரைசதத்தை கடக்க, மறுமுனையில் அக்சர் படேலும் 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். வெறும் 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 251 ரன் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா வெற்றியுடன் தொடங்கி உள்ளது.