அரசியல் அழுத்தத்தை குறைக்க விஜய் புது டெக்னிக்! Actor Vijay | TVK | Political Pressure | 2026 Electi
நடிகர் விஜய் 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். அதோடு தன் கடைசி திரைப்படமான ஜனநாயகன் பட இறுதிக்கட்ட பணிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். திரைப்பட வேலைகளை முடித்து, படம் ரிலீசானதும், முழு நேரமாக அரசியல் பணியை தொடர, அவர் திட்டமிட்டுள்ளார். தற்போது, நேரம் கிடைக்கும்போது மட்டுமே, கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கட்சிக்கு, 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணி, சில தடைகளால் நிறைவடையவில்லை. மாநிலம் முழுதும் உள்ள, 68,000 பூத் கமிட்டிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து பூத்களிலும் நிர்வாகிகளை நியமித்து விட்டதாக, மாவட்ட செயலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பல பூத்களுக்கு இன்னும் நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை. பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு, மண்டல அளவில் கூட்டம் நடத்த திட்டமிப்பட்டுள்ளது. கோவை மண்டல கூட்டம் முடிந்த நிலையில், மற்ற மண்டலங்களில் கூட்டம் நடத்துவது இழுபறியாக உள்ளது. இதுகுறித்து, கட்சியின் மாநில நிர்வாகிகளிடம் கேட்கும்போதெல்லாம், அவர்கள் மாற்றி மாற்றி தகவல் சொல்கின்றனர். இதனால், தான் நினைத்தது நடக்காமல் போய் விடுமோ என்ற பதட்டம் அவ்வப்போது விஜய்க்கு ஏற்பட்டு விடுகிறது. இதையடுத்து கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் நடிகர் விஜய் கோபப்படுவது வாடிக்கையாகி இருப்பதாக கட்சியினர் பலரும் தெரிவிக்கின்றனர். பல நெருக்கடிகளுக்கு ஆளாகி இருக்கும் விஜய், எப்படியாவது டென்ஷனை குறைத்து, கூலாக இருக்க வேண்டும் என விரும்பினார். இதற்காக, புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் ஆலோசனையில், சிவப்பு சந்தன மாலையை அணிந்து, விஜய் வலம்வரத் துவங்கியுள்ளார். மேலும் பூஜை செய்த சந்தனம், குங்குமம் கலந்த திலகத்தையும், விஜய் நெற்றியில் வைத்து வருகிறார். சிவப்பு சந்தன மாலையை, வெள்ளியுடன் கோர்த்து, அந்த ஜோதிடர் தயாரித்துக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அணிவதால், பஞ்சபூதங்களின் ஆதரவு கிடைக்கும். டென்ஷன் குறையும்; மன உறுதி, விவேகம் அதிகரிக்கும். தொடங்கிய எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி குறையும், எதிர்பார்க்கும் வளமான வாழ்க்கை தேடி வரும் என, அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.