சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட் பரிந்துரைக்க வேண்டுகோள் annamalai| bjp| vengaivayal issue| high court
பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை: புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் 2022 டிசம்பர் 24ல் நடந்தது. குற்றவாளிகளை கண்டறிவதில் தொய்வு காட்டிய போலீசை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர். 2023 மார்ச்சில், ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்த ஐகோர்ட் 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 2023 செப்டம்பரில் ஒரு நபர் கமிஷன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்தது. அதன் பின்னும், வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் 3க்குள் இறுதி அறிக்கை சமர்ப்பிக்க சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்ததாக கூறப்பட்டது. அதே நாளில் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த 20ம் தேதியே புதுக்கோட்டை சிறப்பு கோர்ட்டில் 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. 20ம் தேதியே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தால் 23ம் தேதி சிறப்பு கோர்ட்டில் சிபிசிஐடி அவகாசம் கேட்டது ஏன்? குற்றம் நடந்து 750 நாட்கள் ஆகியும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அவசர அவசரமாக பட்டியல் சமூகத்தினர் 3 பேர் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது பல சந்தேங்களை ஏற்படுத்தி இருக்கிறது. திமுக அரசு நடத்தும் இந்த விசாரணை மீது மக்களுக்கு துளியளவும் நம்பிக்கை இல்லை. நேர்மையான விசாரணை நடக்க, இந்த வழக்கை சிபிஐக்கு ஐகோர்ட் பரிந்துரைக்க வேண்டும் என்பதே தமிழகபாஜவின் நிலைப்பாடு என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.