நயினார் நாகேந்திரனுடன் அமித்ஷா பேசியது என்ன? Amit Shah | Nainar Nagendran | BJP | ADMK Alliance
அவசர அழைப்பில் டில்லி சென்ற தமிழக பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அடுத்தகட்ட அதிரடிகள் தொடர்பாக, அமித் ஷா பெரிய பிளான் வைத்திருப்பது, இந்த அரை மணி நேர சந்திப்பில் தெரிய வந்துள்ளதாக, தமிழக பா.ஜ. வட்டாரங்கள் கூறுகின்றன. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்ததும், இரு கட்சியினரிடம் ஏற்கனவே நிலவிய முரண்களை முழுமையாக அகற்ற வேண்டும் என, தமிழக பா.ஜ. தலைவர்களிடம் அமித் ஷா கூறிச் சென்றார். அதன்பின்னும், ஒருசிலர் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும்; அதில் பா.ஜ.வுக்கும் பங்கு உண்டு என்பதுபோல பேசி வந்தனர். இது அ.தி.மு.க. தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. அமித் ஷாவிடம் இதுபற்றி பேசியுள்ளனர். இதையடுத்து நயினாரை தொடர்பு கொண்ட அமித் ஷா தரப்பினர், கூட்டணி குறித்து ஆளாளுக்கு கருத்து சொல்ல வேண்டாம். அ.தி.மு.க. தரப்பில், பழனிசாமி தவிர யாரும் எதுவும் பேச மாட்டார்கள் என, சொல்லி இருந்தனர். இதையடுத்தே, கூட்டணி குறித்து தேவையில்லாமல் கருத்து சொல்ல, தங்கள் கட்சியினருக்கு நயினாரும், பழனிசாமியும் தடையுத்தரவு போட்டனர். கூட்டணி பற்றியோ, ஆட்சி அமைப்பு பற்றியோ, யாரும் எதுவும் இப்போது சொல்வதில்லை. இந்நிலையில் அவசரமாக டில்லி அழைக்கப்பட்ட நயினார் நாகேந்திரனுடன், 30 நிமிடங்களுக்கும் மேலாக அமித் ஷா பேசியுள்ளார். அப்போது சில விஷயங்களை அவர் அறிவுறுத்தி உள்ளார். தி.மு.க. அரசின் நிர்வாக தோல்விகளை, மக்களுக்கு எல்லா வழிகளிலும் எடுத்துச் சொல்ல வேண்டும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்களை இதற்காகவே திட்டமிட வேண்டும். மாநில அமைச்சர்கள், அதிகாரிகளின் ஊழல்கள், நீதிமன்ற உத்தரவுக்கு பின், பதவி விலகிய செந்தில் பாலாஜி, பொன்முடி விவகாரங்கள் குறித்தெல்லாம், மக்களிடத்தில் பேசுங்கள். இதற்காக தகவல் தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்துங்கள் என அமித்ஷா கூறி உள்ளார். இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை குறித்து, அமித் ஷா முக்கியமாக பேசியிருக்கிறார். அதன் பின்னணியை, அமலாக்கத் துறை முழுமையாக வெளியில் கொண்டு வரும். அதற்கு முன், அரசு அதிகாரிகளில் இருந்து அறிவாலயம் வரை பலரையும் அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைக்கும். தேவையானால் யாரையும் கைது செய்யும் என்றும் கோடிட்டு காட்டியுள்ளார் அமித் ஷா. அரவிந்த் கெஜ்ரிவால் மீதான நடவடிக்கைகளில் டில்லி பா.ஜ.வினர் எப்படி செயல்பட்டனரோ, அதைவிட சாதுரியமாகவும் வேகமாகவும், இந்த விஷயத்தில் தமிழக பா.ஜ.வினர் செயல்பட வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியிருக்கிறார். தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னணி தலைவர்கள் மீது நடவடிக்கைகள் வரும். அதை பா.ஜ, அ.தி.மு.க. கூட்டணிக்கு சாதகமாக பயன்படுத்தும் விதமாக, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பு முழுக்க முழுக்க தமிழக பா.ஜ. தலைவர்களிடம் தான் உள்ளது. இந்த மாதிரியான விஷயங்களில், நீங்கள் கொஞ்சம் அதிரடியாக செயல்பட வேண்டும் என்றும், நயினாரிடம் அமித் ஷா கூறியுள்ளார். தமிழக ஆட்சியாளர்கள் மீது, மத்திய அரசு வேகமான நடவடிக்கைகளை முடுக்கிவிட ஆயத்தமாகி வருவதையே, இந்த சந்திப்பும், அமித் ஷா பேச்சும் உணர்த்துவதாக, தமிழக பா.ஜ. வட்டாரத்தில் கூறப்படுகிறது.