உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உண்மை கண்டறியும் சோதனை? பாஜவில் ஆரம்பம் | BJP | Tamilnadu BJP | Booth committee BJP

உண்மை கண்டறியும் சோதனை? பாஜவில் ஆரம்பம் | BJP | Tamilnadu BJP | Booth committee BJP

தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. மாவட்ட தலைவர் தலைமையில் மையக் குழு, மண்டலம், கிளை அளவில் நிர்வாகிகள் உள்ளனர். கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜ தனித்து போட்டியிட்டது. அப்போது இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டியது. இதற்காக அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் பூத் கமிட்டிகள் அமைக்க, மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள, 68,000 ஓட்டுச்சாவடிகளில், பா.ஜ.,வுக்கு, 50,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக, கட்சி தலைமையிடம் மாவட்ட தலைவர்கள் அறிக்கை அளித்தனர். ஆனாலும், அந்த தேர்தலில், பா.ஜ. ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இருந்தாலும் ஓட்டுவங்கியை கணிசமாக உயர்த்தியது. இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், பாஜ-அ.தி.மு.கவுடன் இணைந்து களம் காண்கிறது. 40 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதில், 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு வைத்துள்ளது. இதற்கு முதல் கட்டமாக, பூத் கமிட்டிகள் பலப்படுத்தப்பட உள்ளன. ஏற்கனவே 50,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் உண்மைதன்மை குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும், 12 பேர் உள்ளனரா என்பது தொடர்பாக, லோக்சபா தொகுதி வாரியாக ஆய்வு செய்ய, தமிழக பா.ஜ., முடிவு செய்து உள்ளது. இந்த ஆய்வு, முதல் கட்டமாக, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், துாத்துக்குடி ஆகிய லோக்சபா தொகுதிகளில் மூன்று நாட்களுக்கு நடக்கிறது. இந்த சோதனையில், கட்சியின் தீவிர விசுவாசிகள், 2,000 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒருவருக்கு மூன்று பூத்கள் என்று ஒதுக்கப்பட்டு, உண்மை கண்டறியும் சோதனை செய்யப்பட உள்ளது.

ஜூலை 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை