டிரம்ப்-மஸ்க் பகிரங்க மோதல்? பரபரப்பு பின்னணி Donald Trump vs Elon Musk | big beautiful bill | DOGE
டிரம்ப் கொடுத்த சக்திவாய்ந்த பதவி எலான் மஸ்க் தூக்கி எறிந்த அதிர்ச்சி அமெரிக்க அரசியலை அதிர வைத்த ட்விஸ்ட் அமெரிக்க அதிபராக 2வது முறை டிரம்ப் பதவி ஏற்றதும் உலகின் பணக்கார தொழில் அதிபரான எலான் மஸ்கை சிறப்பு அரசு அதிகாரியாக நியமித்தார். DOGE எனப்படும் செயல் திறன் துறை என்ற சிறப்பு துறையை உருவாக்கி அதன் தலைவராக மஸ்கை நியமனம் செய்தார். அமெரிக்க அரசாங்கத்தின் தேவையற்ற செலவுகளை குறைப்பது தான் இந்த துறைக்கு வழங்கப்பட்ட முக்கிய பணி. வேகமாக செயல்பட்ட மஸ்க், தேவையற்ற செலவீனம் தொடர்பாக டிரம்ப்புக்கு தொடர்ந்து ரிப்போர்ட் கொடுத்தார். அதன் அடிப்படையில் பல துறைகளை டிரம்ப் மூடினார். பல ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கினார். உலக நாடுகளுக்கு பல வடிவில் அமெரிக்கா வழங்கி வந்த பல ஆயிரம் கோடி நிதி உதவியை அடியோடு நிறுத்தினார். மஸ்க் மற்றும் டிரம்பின் அதிரடியால் அமெரிக்காவில் போராட்டமே வெடித்தது. மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு எதிராகவும் பலர் போராடினர். எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து டிரம்புக்காக வேலை செய்து வந்த மஸ்க், இப்போது திடீரென சிறப்பு செயல் திறன் துறையின் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: சிறப்பு அரசு அதிகாரியாக எனது பணிக்காலம் முடிந்து விட்டது. அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்கும் பணியை மேற்கொள்ள வாய்ப்பு தந்த அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. அரசின் செயல் திறனை ஒழுங்குப்படுத்த உருவாக்கப்பட்ட இந்த துறையின் நோக்கம் காலப்போக்கில் இன்னும் வலிமை பெறும் என்று மஸ்க் கூறி உள்ளார். மஸ்க் விலகலை வெள்ளை மாளிகை அதிகாரிகளும் இப்போது உறுதி செய்து விட்டனர். தேர்தலின் போது டிரம்புக்கு பக்கப்பலமாக இருந்தவர் மஸ்க். அவருக்காக தீவிர பிரசாரம் செய்தார். தேர்தலில் வெற்றி பெற பல ஆயிரம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்தார். இப்போது, டிரம்ப் வழங்கிய முக்கிய பொறுப்பில் இருந்து திடீரென மஸ்க் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் டிரம்ப் உடன் ஏற்பட்ட மோதல் தான் முக்கிய காரணம் என்ற பேச்சு எழுந்து இருக்கிறது. அதாவது, அமெரிக்காவில் புதிய வரி மசோதா ஒன்றை டிரம்ப் கொண்டு வந்தார். அதை ‛big beautiful மசோதா என்று டிரம்ப் புகழ்ந்தார். ஆனால் அந்த மசோதாவுக்கு எதிராக மஸ்க் பேசினார். புதிய மசோதா ஏமாற்றம் அளிப்பதாக சொன்னார். அதோடு டிரம்பின் ‛big beautiful டயலாக்கையும் கடுமையாக விமர்சித்தார். ‛ஒன்று பெரிய மசோதாவாக இருக்கலாம்; அல்லது நல்ல மசோதாவாக இருக்கலாம். நிச்சயமாக, இரண்டும் சேர்ந்து இருக்க முடியாது என்று டிரம்ப் மசோதாவை மஸ்க் சாடினார். இதன் தொடர்ச்சியாக தான் இப்போது டிரம்ப் வழங்கிய பதவியில் இருந்தும் விலகி இருக்கிறார். இனி டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் என தனது தொழில் சார்ந்த விவகாரங்களில் மஸ்க் முழு கவனத்தையும் செலுத்துவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சொல்கின்றன.