ராமதாசுடன் இருப்பவர்கள் டிராமா போடுறாங்க; அன்புமணி | Dr.Ramadoss | Anbumani | PMK | district secr
கடந்த ஆண்டு டிசம்பரில் புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தன் மூத்த மகள் காந்திமதியின் மகன் முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞர் அணித் தலைவராக அறிவித்தார். இதற்கு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டத்தை விட்டு வெளியேறினார். இதையடுத்து, கடந்த மே மாதம் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில், தேர்தல் கூட்டணி முடிவை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சிக்குள்ளேயே கூட்டணியும் கோஷ்டியும் இருக்கக்கூடாது என அன்புமணியை மேடையில் வைத்துக்கொண்டு மறைமுகமாக குறை கூறி பேசினார். அப்போது முதல் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி இடையே விரிசல் அதிகரிக்க தொடங்கியது. அன்புமணி கட்சியில் உள்ளடி வேலை பார்க்கிறார். அவரது தலைவர் பதவி முடிந்துவிட்டது. கட்சி நிறுவனரும், தலைவரும் நான் தான் என்றார் ராமதாஸ். நான் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவன்; என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சியின் பெயர், சின்னம் தங்களிடம் இருப்பதாகவும் கூறினார். தேர்தல் ஆணையத்துக்கு சென்ற ராமதாஸ், கட்சி நிறுவனரான தனக்கு தான் கட்சி சொந்தம் என்றார். இவ்வாறான மோதல் போக்கு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், ராமதாஸ் அக்டோபர் 5ம் தேதி ஆஞ்சியோ சிகிச்சைக்காக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை முதல்வர் ஸ்டாலின், எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். ஆனால் மருத்துவமனைக்கு சென்று ராமதாஸை பார்க்க முடியாமல் திரும்பிய அன்புமணி, ஐசியூ உள்ள போனா இன்ஃபெக்சன் ஆயிடும் என காரணம் கூறி விட்டு கிளம்பினார். அனுமதி மறுப்பால் அன்புமணி அப்செட்டில் இருந்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சென்னை உத்தண்டியில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அன்புமணி தலைமையில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், பாமக இளைஞர் அணி தலைவர் பொறுப்புக்கு செஞ்சி முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார். ராமதாசுடன் இருப்பவர்கள் குறித்தும் அன்புமணி காட்டமாக பேசினார். எவ்வளவோ சோதனைகளை கடந்து வந்து விட்டேன். மனதில் வலி இருந்தாலும் வெளியில் சிரித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் மற்ற கட்சிகளிடம் சீட்டுகள் பெற வேண்டிய நிலையில் உள்ளதை எண்ணி வருந்துகிறேன் என உருக்கமாக பேசினார். #Dr.Ramadoss #Anbumani #PMK #districtsecretarymeeting