உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பொய் பேசினால் உலகம் கேட்கும் என ராகுல் நினைக்கிறார் | Finance minister| Rahul | Nirmala Sitharaman

பொய் பேசினால் உலகம் கேட்கும் என ராகுல் நினைக்கிறார் | Finance minister| Rahul | Nirmala Sitharaman

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் துவங்கியது. பிப்ரவரி 1ம்தேதி 2025-26ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலானது. நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்.பி.க்கள் பேசினர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசும்போது, மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் நல்ல யோசனைதான். ஆனால் நாம் அதில் தோல்வி அடைந்துவிட்டோம் என்றார். சீனா உற்பத்தி துறையில் உலகளவில் முதன்மையான இடத்தை பிடித்து விட்டது. அதனுடன் ஒப்பிடும்போது நம்நாடு 10 ஆண்டுகள் பின்தங்கி உள்ளது எனவும் ராகுல் கூறினார். ராகுலின் விமர்சனங்களுக்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது- 10 ஆண்டு கால ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உற்பத்தி துறையை வலுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது. உங்களது ஆட்சியில், சீனா சென்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டீர்கள். அதை ஏன் வெளியிடவில்லை. அதில் என்ன இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியின்போது காஷ்மீர் மற்றும் லடாக்கில் இருந்து சீனா எவ்வளவு நிலத்தை எடுத்துக்கொண்டது என்பது பற்றி ஏன் நீங்கள் பேசவில்லை? எழுந்து நின்று பொய் பேசினால் உலகம் கேட்கும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நினைக்கிறார். ராகுலிடம் முட்டாள்தனமான தன்னம்பிக்கை உள்ளது என நிர்மலா கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுகளால் வேலையின்மை பிரச்னையை கையாள முடியவில்லை என லோக்சபாவில் பேசும்போது ராகுல் கூறி இருந்தார். அதற்கு பதில் அளித்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது- காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் நடந்த குழப்பங்களை சரி செய்யவே எங்களுக்கு 4 முதல் 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த 10 ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? வேலைவாய்ப்பை விட்டு விடுங்கள். ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் வேறு என்னதான் நடந்தது? ஒன்றுமே நடக்கவில்லையே. பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டது. வங்கிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தன. தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அதனால்தான் அவர்களது ஆட்சியில் வேலை தர முடியவில்லை என ராகுல் ஒப்புக்கொள்கிறார். ஆனால், அது போதாது. பொருளாதார வளர்ச்சியில் இன்று 5வது இடத்தில் இருக்கிறோம். அடுத்த 2 ஆண்டுகளில் 3வது இடத்தைப் பிடிப்போம். பொருளாதார குற்றவாளிகள் பணத்தை ஏமாற்றிவிட்டு நாட்டைவிட்டு ஓடினர். அமலாக்க துறை துணையுடன் அவர்களுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்து 22 ஆயிரம் கோடி ரூபாயை வங்கிகளிடம் கொடுத்திருக்கிறோம் என நிர்மலா சீதாராமன் கூறினார்.

பிப் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி