டிரம்பை பத்தி தெரியாதா? நாம வேற மார்க்கெட்டை தேடணும் | India US | Tarrif War | Shashi Tharoor
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், குறைந்த விலை என்பதால் இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தது. இதனால் கடுப்பான டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதிப்பதாக திடுதிப்பென அறிவித்தார். இது, இந்திய தொழில் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வரியை 50 சதவீதமாக உயர்த்தி மேலும் அதிர்ச்சி தந்தார், டிரம்ப். அமெரிக்காவின் செயல் நியாயமற்றது என இந்தியா பதிலடி கொடுத்தது. வரி சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். அமெரிக்கா வரியை குறைக்க வேண்டும் என்பதற்காக அந்நாட்டின் மரபணு மாற்று வேளாண் பொருட்களை இந்தியாவுக்குள் அனுமதிக்க மாட்டேன்; என்னைப் பொறுத்தவரை இந்திய விவசாயிகளின் நலன் முக்கியம் எனவும் மோடி கூறினார். மத்திய அரசுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வரும் காங்கிரஸ் எம்பி சசி தரூர் நேற்று அதிரடி கருத்தை கூறினார். அமெரிக்கா நம் மீது 50 சதவீத வரி விதித்தால், நாமும் அமெரிக்கா மீது 50 சதவீத வரி விதிக்க வேண்டும் என தரூர் ஆவேசமாக கூறினார். இன்று பார்லிமென்ட் வளாகத்தில் பேட்டியளித்த அவர், டிரம்பின் வரி விதிப்பு பின்னணி பற்றி சுவாரஸ்ய தகவலை வெளியிட்டார். இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளன. இரு நாடுகளும் ராணுவம் உள்ளிட்ட துறைகளில் நல்லுறவு கொண்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்கா தனது நடத்தையை திடீரென மாற்றிக் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவும் நம்நாட்டு மக்களின் நலன் கருதி பல விஷயங்களை பற்றி சிந்தித்தாக வேண்டும். அமெரிக்காவை மட்டுமே நம்பியிராமல் இந்திய பொருட்களை விற்க வேறு சந்தைகளை கண்டறிந்தாக வேண்டும். ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிய சந்தைகளை இந்தியா கண்டுபிடித்து அந்நாடுகளுக்கு நம் பொருட்களை விற்க வேண்டும் என சசி தரூர் கூறினார்.