இந்திய பெருங்கடல் பாதுகாப்பில் இந்தியாவின் பங்கு அளப்பரியது INS Nilgiris| INS Surat| INS Vaghsree
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன போர்க் கப்பல்களை, பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் சூரத் ஆகிய போர்க் கப்பல்களும், ஐஎன்எஸ் வாக்சீர் எனப்படும் நீர்மூழ்கி போர்க் கப்பலும் கடற்படையுடன் இணைக்கப்பட்டன. அதிநவீன ஹெலிகாப்டர்களை சுமந்து செல்லும் வகையிலும், எதிரிகளின் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி, எதிர் தாக்குல் நடத்தும் வகையிலும், இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடலில் நீருக்கு மேலேயும், நீருக்கு அடியிலும் எதிரிகளை தாக்கி அழிக்கும் வகையில் நீர் மூழ்கி போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த மூன்று போர்க் கப்பல்களும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்பது பெருமை அளிக்கிறது. கடல் வழி வாணிபத்தில் நமக்கு மிகப் பெரிய வரலாறு உள்ளது. இந்தியப் பெருங்கடலில் கடல் வழி பாதுகாப்பிலும் இந்தியா சிறப்பாக செயலாற்றி வருகிறது. விரிவாக்கம் என்பதை விட, வளர்ச்சிக்கு தான் நாம் முக்கியத்துவம் அளிக்கிறோம். குளோபல் சவுத் நாடுகளின் வளர்ச்சி மற்றும் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஓர் உலகம் ஒரு குடும்பம் என்பதை வலியுறுத்துகிறோம். புதிய போர்க் கப்பல்களின் உதவியால், இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்தப்படும். புதிய கடல் வழித்தடங்களை கண்டுபிடிக்கவும், ஏற்கனவே உள்ள வழித்தடங்களை மேம்படுத்தவும், இந்தியா முதலீடு செய்யும். இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை மீது உலக நாடுகள் வைத்துள்ள நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 21ம் நுாற்றாண்டில் பாதுகாப்பு துறையில் இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. நிலம், நீர், ஆகாயம், ஆழ்கடல் என அனைத்து பகுதிகளிலும், பாதுகாப்பை இந்தியா வலுப்படுத்தி உள்ளது. பாதுகாப்பு துறையை மேம்படுத்தவும், சுய சார்பை அதிகரிக்கவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். ஆபத்து காலங்களில் கூட அயல் நாடுகளின் உதவியை கூடிய அளவில் குறைவாக பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் பணியாற்றி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் கர்நாடகாவில் மிகப் பெரிய ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கான டிபென்ஸ் காரிடார் துவங்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டும் துறையில் முதலீடு செய்யப்படும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. இந்த துறையில் நாம் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். இது, நாட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் பணப்புழக்கத்திற்கு வழி வகுக்கும்.