மகா விஷ்ணுவை மிஞ்சிய திமுக மந்திரி வீடியோ-பாஜ அஸ்திரம் Maha vishnu vs Minister Gandhi | BJP vs DMK
மகா விஷ்ணு கைது விவகாரம் திமுகவை சிக்க வைத்த வீடியோ பாஜ கையில் ஆதாரம் சென்னையில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தன்னம்பிக்கை உரை ஆற்ற சென்ற பரம்பொருள் பவுண்டேஷன் தலைவர் மகா விஷ்ணு, மாணவர்கள் முன்பு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தியதாக சர்ச்சை வெடித்தது. தன்னம்பிக்கை உரை என்ற பெயரில் எப்படி ஆன்மிகம் பேற்றி பேசலாம்? போன ஜென்மம், பாவ, புண்ணியம், மறுபிறவி பற்றி எல்லாம் மாணவர்கள் முன்பு எப்படி பேசலாம்? என்று எதிர்ப்பு குரல் எழுந்தது. மகா விஷ்ணு பேசும் போதே மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் குறுக்கிட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே நடந்த வாதம் தொடர்பான வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவும் சர்ச்சையாக வெடித்தது. மகா விஷ்ணுவை கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள், பாஜவினர் மற்றும் இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அவர் பேசியதில் அப்படி என்ன தவறு இருக்கிறது என்று பொங்கி எழுந்தனர். இப்போது இதே விவகாரத்தில் திமுகவை சிக்க வைக்கும் வகையில் பாஜ ஒரு வீடியோவை வெளியிட்டு அதிர வைத்து இருக்கிறது. அதாவது, மகா விஷ்ணு எப்படி பேசினாரோ அதே மாடலில் மாணவர்கள் முன்பு பள்ளிக்கூடத்தில் திமுக அமைச்சர் காந்தி பாவ, புண்ணியம் பற்றி பேசி இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வாலாஜாபேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் தான் அமைச்சர் காந்தி அப்படி பேசினார். போன ஜென்மத்தில் அதிகமான பாவம் செய்தால் ஆண் பிள்ளை பிறக்கும் என்றும், புண்ணியம் செய்தால் பெண் பிள்ளை பிறக்கும் என்றும் அவர் சொன்னார். மகா விஷ்ணு கைதுக்கு நியாயம் கேட்கும் வகையில் அந்த வீடியோவை பாஜ இப்போது வெளியிட்டுள்ளது.