சமாளிப்பாரா மகா., முதல்வர்! எதிரிகள் காத்திருப்பு | Maharashtra | Devendra Fadnavis
அறிவித்த இலவசங்களால் அரசு கஜானா காலி! கட்சிக்குள் போர்க்கொடி பட்னவிஷுக்கு நெருக்கடி மஹாராஷ்டிராவில் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டசபையில் மொத்த எம்எல்ஏக்களில் 82 சதவீதம் பாஜ கூட்டணி தான். இருந்தும் நான்கு மாதங்களாக முதல்வர் பட்னவிஸ் திண்டாடி வருகிறார். ஒரு பக்கம் கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சரியான பதவிகள் தரவில்லை என வெறுப்பில் உள்ளனர். இன்னொரு பக்கம் பாஜவிலேயே குழப்பம் நிலவுகிறது. புதிதாக வந்தவர்களுக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து சீனியர்களை மட்டம் தட்டிவிட்டனர் என பாஜ எம்எல்ஏக்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையே அவுரங்கசீப் கல்லறை விவகாரம் வேறு ஆட்சியை களங்கப்படுத்திவிட்டது. முதல்வர் வசம் உள்துறை இருப்பதால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார் பட்னவிஸ். இது போக வெற்றி பெறுவதற்காக பாஜ கூட்டணி அறிவித்த இலவசங்கள் அரசு கஜானாவை காலியாக்கி விட்டன. மகாராஷ்டிரா இப்போது 9.2 லட்சம் கோடி கடனில் உள்ளது. இந்த சூழலில் பட்னவிஸ் எப்படி கட்சிக்குள்ளும், வெளியேயும் உள்ள எதிர்ப்புகளையும், நிதி நிலையையும் சமாளிக்கப் போகிறார் என அவருடைய எதிரிகள் காத்திருக்கின்றனர்.