உங்களால் மட்டுமே முடியும்: புடினுக்கு மெலனியா கடிதம் | Melania Trump | letter to Russia Putin
உக்ரைன் குழந்தைகளின் சிரிப்பு உங்கள் கையில் இருக்கிறது புடின் மெலனியா கடிதம் அமெரிக்காவின் அலாஸ்கா நகரத்துக்கு கடந்த 15ம் தேதி வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது அதிபர் டிரம்ப், தனது மனைவி மெலனியா எழுதிய கடிதத்தை புடினிடம் வழங்கினார். புடினுக்கு தான் எழுதிய கடிதத்தை மெலனியா தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்று வெளியிட்டார். அதில் அவர் எழுதி இருப்பதாவது அன்புள்ள அதிபர் புடின் அவர்களுக்கு, ஒரு கிராமத்தில் பிறந்திருந்தாலும், அற்புதமான நகரத்தில் பிறந்திருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் மனதில் அமைதி கனவு காண்கின்றன. அன்பு, வாய்ப்பு, ஆபத்தில் இருந்து பாதுகாப்பு ஆகிய கனவுகளை அவர்கள் காண்கின்றார்கள். நாம் பெற்றோர்களாக இருந்து அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். அது நமது கடமை. அதேபோல, தலைவர்களின் கடமை என்னவென்றால், விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுதான். அனைவருக்கும் கண்ணியமான உலகத்தை உருவாக்க கண்டிப்பாக நாம் பாடுபட வேண்டும். அதனால் அனைவருடைய எதிர்காலமும் முழுமையாக பாதுகாக்கப்படும்.. ஒவ்வொரு குழந்தையும் அவர்களுடைய வாழ்க்கையை புவிசார் அரசியல் மற்றும் சித்தாந்தங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அப்பாவித்தனமாகத்தான் தொடங்குகிறார்கள். இருந்தாலும் இன்றைய போட்டி நிறைந்த உலகில் சில குழந்தைகள் தங்களின் சிரிப்பை மனதுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறார்கள். புடின் அவர்களே, நீங்கள் தனி ஒரு ஆளாக அவர்களின் மென்மையான சிரிப்பை மீட்டெடுக்க முடியும். அப்பாவி குழந்தைகளை பாதுகாக்கும் போது, நீங்கள் ரஷ்யாவுக்கு மட்டும் சேவை செய்யமாட்டீர்கள். மனித குலத்திற்கே சேவை செய்வீர்கள். ஒரே ஒரு பேனாவை எடுப்பதன் மூலம் அதை இன்று நீங்கள் செய்ய முடியும். அதற்குரிய தகுதி படைத்தவர் நீங்கள். இதுதான் அதற்கு சரியான நேரம் என மெலனியா டிரம்ப் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த கடிதத்தில் உக்ரைன் பெயரைக் குறிப்பிடாமல், போர் நிறுத்தத்துக்கு முயலும்படி அவர் வலியுறுத்தி உள்ளார். உலகம் முழுவதும் மெலனியாவின் இந்த கடிதம் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.