முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறார்: கேஎன் நேரு | Minister Nehru| Tamilnadu | Edappadi
தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேருவின் அறிக்கை திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் சொத்து வரி தீர்மானத்துக்கு எதிராக அதிமுக போராட்ட நாடகத்தை நடத்தி இருக்கிறது. மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகள் கட்டாயம் சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்தியே ஆக வேண்டும் என மத்திய அரசு நிபந்தனை விதித்த போது, வாய் மூடி அமைதியாக இருந்த பழனிசாமி, இன்று திடீரென மக்கள் மீது அக்கறை கொண்டவர் போல வேடம் போடுவது வேடிக்கை. மத்திய அரசு அமைத்த 15வது நிதி ஆணையம் தனது அறிக்கையில், 2022--23 முதல் உள்ளாட்சி அமைப்புகள் மானியம் பெறுவதற்கு, 2021--22ல் சொத்துவரி தள வீதங்களை அறிவித்திருக்க வேண்டும். மொத்த உள்நாட்டு வளர்ச்சிக்கு ஏற்றபடி ஆண்டுதோறும் சொத்து வரி விகிதத்தை உயர்த்த வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளது. தூய்மை இந்தியா திட்டம் மற்றும் அம்ரூத் 2.0 திட்டத்துக்கும் இதே போல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை தமிழக அரசு இதை கடைபிடிக்காவிட்டால், 2021-2026 வரை மத்திய அரசின் மானியம் ரூ. 4 லட்சத்து 36 ஆயிரத்து 361 கோடி நிறுத்திவைக்கப்படும். தூய்மை இந்தியா திட்டம், அம்ரூத் 2.0 திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படாது. மத்திய அரசு நிபந்தனைகளை விதித்தபோது அவர்களுடன் நட்பில் இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. இப்போது அவர், சொத்து வரி உயர்வுக்கு தமிழக அரசு காரணம் என சொல்வது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகும் என நேரு கூறியுள்ளார்.